தேடுதல்

சியூட்டாவில் ஆப்பிரிக்க அன்னை மரியாவின் தேர் பவனி. சியூட்டாவில் ஆப்பிரிக்க அன்னை மரியாவின் தேர் பவனி.  (Our Lady of Africa)

சியூட்டா நெருக்கடி: அமைதி, ஒற்றுமை மற்றும் புதிய தொடக்கத்திற்காக திருஅவை அழைப்பு!

சியூட்டாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து பேராயர் ரமோன் வால்டிவியா அவர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். பேராசை, ஊழல், வாய்ப்பின்மை மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் இந்நெருக்கடிக்குக் காரணமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஸ்பெயின் நாட்டின் காடிஸ் மற்றும் சியூட்டா மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியான பேராயர் ரமோன் வால்டிவியா அவர்கள், சியூட்டாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் நிறுவன நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

அங்குள்ள நிலைமை துன்பம், பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை உணர்ந்து, அவர்களுக்கு ஆதரவு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பேராயர் வால்டிவியா அவர்கள் அருள்பணியாளர்கள், துறவற சபைகள் மற்றும் இறைமக்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்நிகழ்வை பேராசை, ஊழல், வாய்ப்பின்மை மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகளால் தூண்டப்பட்ட ஒரு "மனிதாபிமானப் பேரழிவு" என்று குறிப்பிட்டு வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது மக்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் நுழைந்ததால் குடும்பங்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் எதிர்கொண்ட பயத்தையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் சியூட்டா மக்கள் வெளிப்படுத்திய அமைதியையும் ஒற்றுமையையும் பாராட்டிய பேராயர் அவர்கள், மக்களின் இந்த அணுகுமுறை பதட்டங்கள் ஒரு பெரிய மோதலாக மாறுவதைத் தடுக்க உதவியது என்றும் கூறினார்.

சியூட்டாவின் பாதுகாவலரான ஆப்பிரிக்காவின் புனித அன்னை மரியாவை நம்பிக்கை மற்றும் ஆறுதலின் "கலங்கரை விளக்கமாக" சுட்டிக்காட்டிய அவர், அண்மையில் வெளியான சியூட்டா மக்கள் மீதான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் செய்திக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அருள்பணியாளர்கள், துறவியர், தன்னார்வலர்கள், காரித்தாஸ் மற்றும் பிற கிறிஸ்தவ குழுக்களின் சேவைக்காக அவர்களைப் பாராட்டினார்.

திருத்தந்தையின் வேண்டுகோளைத் தொடர்ந்து, அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவிற்கு முந்தைய இரவில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் நீதிக்காக ஒரு திருவிழிப்பு வழிபாட்டை (prayer vigil) முன்னெடுக்குமாறு மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளுக்கும் பேராயர் வால்டிவியா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நெருக்கடியை புதுப்பிக்கப்பட்ட இறைநம்பிக்கை, ஒற்றுமை, ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கை மற்றும் ஒரு புதிய கலாச்சார தொடக்கத்திற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்று அவர் இறைமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஆகஸ்ட் 2026, 13:49