புளோரஸ் நிலநடுக்கம்: அவசர உதவிகளை முடுக்கிவிட்ட காரித்தாஸ் இந்தோனேசியா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா தெங்காராவில் உள்ள புளோரஸ் பகுதியில் சனிக்கிழமை காலை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுனாமி தாக்கத்தையடுத்து, இந்தோனேசியாவின் காரித்தாஸ் அமைப்பு கத்தோலிக்கத் திருஅவையின் மனிதாபிமான வலையமைப்பின் சேவைகளை முடுக்கிவிட்டுள்ளது.
எம்பேய் நகருக்கு வடகிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் எண்டேவின் மௌரோலில் கடல் மட்டம் அதிகபட்சமாக 0.94 மீட்டர் உயர்ந்து சுனாமியை ஏற்படுத்தியது. சுனாமி எச்சரிக்கை ஏறத்தாழ இரண்டு மணி 33 நிமிடங்களுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது.
வீடுகள், பொதுப் பயண்பாட்டுக் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 15 நிலவரப்படி 38 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் ஆரம்பக்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
"ஒரே திருஅவை, ஒரே பதில்" என்ற கொள்கையின் கீழ் ருடெங், லாபுவான் பாஜோ, குபாங், மௌமேரே மற்றும் எண்டே ஆகிய மறைமாவட்டங்களுடன் காரித்தாஸ் இந்தோனேசியா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
தன்னார்வலர்களும் காரித்தாஸ் குழுக்களும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும், அவசரகால உதவிகளுக்கும் துணைநிற்கின்றனர்.
தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், ருடெங் பகுதியில் உள்ள காரித்தாஸ் அமைப்பு அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை வெளியேற்றி, அவசரகால கூடாரங்களை அமைத்துள்ளது. காரித்தாஸ் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கான வலையமைப்பும், தேசிய அவசரகால உதவிக்கான நிதியமும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போதைய அவசரத் தேவைகளில் தூய்மையான குடிநீர், உடனடியாக உண்ணக்கூடிய உணவு, தங்குமிடப் பொருட்கள், நலவாழ்வுப் பொருட்கள், அவசரகால மருத்துவ உதவி, பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை முக்கியமானவையாக உள்ளன. மேலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடியோருக்கு சிறப்பு உதவிகள் தேவைப்படுகின்றன.
சேத மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால், மறைமாவட்டங்கள் மற்றும் அரசு முகமைகளுடன் காரித்தாஸ் இந்தோனேசியா அமைப்பு தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.