தேடுதல்

கொலம்பியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போகோட்டா உயர் மறைமாவட்டத்தின் “ஆன்மிக முதலுதவி” பணி வழங்கப்படுகிறது. கொலம்பியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போகோட்டா உயர் மறைமாவட்டத்தின் “ஆன்மிக முதலுதவி” பணி வழங்கப்படுகிறது.  (©Oficina Arquidiocesana de Comunicaciones, Arquidiócesis de Bogotá)

கொலம்பியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும்: காரித்தாஸ்

ஆகஸ்ட் 10ஆம் நாள் கொலம்பியாவின் ஐந்து பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2,00,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு கொலம்பிய காரித்தாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 10ஆம் நாள் கொலம்பியாவின் ஐந்து பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2,00,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு கொலம்பிய காரித்தாஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பேரழிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும், வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு நீண்டகால ஆதரவு தேவைப்படுவதாக காரித்தாஸ் தெரிவித்துள்ளது.

சோச்சாவின் ஆயரும், கொலம்பிய காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான ஆயர் ஜுவான் கார்லோஸ் பாரெட்டோ பாரெட்டோ அவர்கள், கொலம்பிய ஆயர்கள் பேரவை, மறைமாவட்டங்கள், அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகம் மற்றும் உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து திருஅவை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாகத் தெரிவித்தார்.

சேதமடைந்த அல்லது தகர்க்கப்பட்ட வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உணவு, மருந்துகள், கூடாரங்கள், மெத்தைகள் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவை உடனடி முன்னுரிமைகளில் அடங்கும். திருஅவையின் நலவாழ்வு சேவைகள் மூலம் உளவியல் ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது.

ஊடகங்களின் கவனம் குறைந்தாலும் உதவிகள் நின்றுவிடக் கூடாது என்று வலியுறுத்திய ஆயர் பாரெட்டோ அவர்கள், வீடுகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், ஆலயங்கள் மற்றும் பிற இன்றியமையாத உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப நீண்டகால ஆதரவு தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருஅவை பொருளாதார உதவிகளுடன், ஆன்மீக ஆதரவையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆகஸ்ட் 19ஆம் நாள், 80 அருள்பணியாளர்கள் தங்களது பணியைத் தொடங்கி, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, மக்களின் துயரங்களைக் கேட்டறிந்து, அவர்களுடன் இணைந்து செபித்து, பாவமன்னிப்பு அருட்சாதனத்தை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்து வருகின்றனர்.

குடும்பங்களின் பிரிவு மற்றும் இடம்பெயர்வைத் தொடர்ந்து அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பாதுகாப்பதிலும் காரித்தாஸ் அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இதுவரை பெறப்பட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஆயர் பாரெட்டோ அவர்கள், மீண்டு வருவதற்கான பயணம் என்பது ஒரு நீண்ட பயணம், அதில் "இறைவன் நம்முடன் பயணிக்கிறார்" என்று கூறித் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஆகஸ்ட் 2026, 16:09