கம்யூனிச அடக்குமுறைக்கு மத்தியில் இறைநம்பிக்கையின் சாட்சியாக வாழ்ந்த அருள்பணி ஃபிண்டிஷ்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
போலந்து நாட்டில் கம்யூனிச அடக்குமுறையால் மறைசாட்சியாக உயிர்நீத்த முதல் அருளாளரான அருள்பணி வ்ளாடிஸ்லாவ் ஃபிண்டிஷை அண்மையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தீமையை நன்மையால் வென்று, மன்னிப்பின் வழியாகவே “அன்பின் நாகரிகம்” கட்டியெழுப்பப்படுகிறது என்பதற்கு அவரது வாழ்க்கை சிறந்த சான்றாகத் திகழ்கிறது என்று பாராட்டியுள்ளார்.
1907 ஆம் ஆண்டு தெற்கு போலந்தில் பிறந்த ஃபிண்டிஷ், 1932 ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், மேலும் போர், வறுமை மற்றும் இடப்பெயர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது, தேசிய அல்லது மத வேறுபாடின்றி யூதர்கள் உள்பட அடக்குமுறையை எதிர்கொண்ட மக்களுக்கு அவர் உதவினார்.
போருக்குப் பிறகு, அவர் பங்குத் திருஅவையை மீண்டும் கட்டியெழுப்பவும், ஏழைகள் மற்றும் துன்பப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கவும் சோர்வின்றி உழைத்தார். அவரது மேய்ப்புப்பணி, மத வாழ்வை ஒடுக்கவும், பொது வாழ்விலிருந்து இறைநம்பிக்கையை அகற்றவும் முயன்ற போலந்து கம்யூனிச அதிகாரிகளுடன் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் ஈர்க்கப்பட்ட “திருஅவையின் நற்செயல்” முயற்சியில் இணைந்து செயல்பட்ட அருள்பணி ஃபிண்டிஷ், நல்லிணக்கம், குடும்ப ஒற்றுமை, இறைவேண்டல் மற்றும் பிறருக்கு உதவும் பிறரன்புப்பணிகளைத் தமது பங்குமக்களிடையே ஊக்குவித்தார்.
1963 ஆம் ஆண்டு, மதத்தைப் பின்பற்றுமாறு மக்களைக் கட்டாயப்படுத்தியதாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இடம்பெற்ற ஒரு போலியான விசாரணைக்குப் பிறகு, அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதிகாரிகள் அவருக்கு உணவுக்குழல் புற்றுநோய்க்கான சிகிச்சையை வழங்க மறுத்த நிலையில், அவர் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளைச் ஏற்றுக் கொண்டார்.
மிகவும் மோசமான உடல்நிலையுடன் விடுவிக்கப்பட்ட அருள்பணி ஃபிண்டிஷ், 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று தனது 56 வது வயதில் இறந்தார். அவர் 2005 ஆம் ஆண்டு வார்சாவில் அருளாளராக உயர்த்தப்பட்டார். இறைநம்பிக்கை, மன்னிப்பு, துணிவு மற்றும் பிறருக்கான சேவை ஆகியவற்றுக்கு அவரது வாழ்க்கை ஒரு ஆற்றல் மிக்க உதாரணமாக இன்றும் திகழ்கிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.