வாழ்க்கையை மனிதத்தன்மையுடன் வாழ அழைக்கும் அசிசி பண்பாட்டு விழா!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
“பிரான்சிஸின் முற்றம்” எனப்படும் அசிசி புனித மடத்தின் பிரான்சிஸ்கன் துறவியர்களால் நடத்தப்படும் புகழ்பெற்ற பண்பாட்டு மற்றும் ஆன்மிக நிகழ்வின் 12-ஆவது பதிப்பு, செப்டம்பர் 10 முதல் 13 வரையும், செப்டம்பர் 17 முதல் 20 வரையும் அசிசியில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு “ஒரு நற்செய்தி” என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்நிகழ்வு, அசிசியின் புனித பிரான்சிஸ் இறந்து 800 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் தரம், மனித உறவுகள், ஆன்மீகம், பண்பாடு, நலவாழ்வு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அம்சங்களை மையப்படுத்தி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
புனித துறவியர் மடத்தின் (Sacred Convent) துறவிகளால் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வில், சமகாலத்தில் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், மதத் தலைவர்கள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் ஒன்றிணைய உள்ளனர்.
புனித பிரான்சிஸின் சகோதரத்துவப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்நிகழ்வு, உறவுகள், ஆன்மீகம், கலாச்சாரம், ஆரோக்கியம், நல வாழ்வு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வாயிலாக வாழ்க்கையை ஆராய்கிறது.
இசை, நாடகம், கலந்துரையாடல்கள் மற்றும் சிந்திப்பதற்கான தருணங்கள் ஆகியவை இடம்பெறும் இந்நிகழ்வில், இத்தாலியப் பியானோ கலைஞரும் இசையமைப்பாளருமான ஜியோவானி அல்லேவி, இத்தாலிய சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளார். அதேவேளையில், ஸ்பொலேட்டோ சிறைச்சாலையைச் சேர்ந்த நாடகக் குழுவானது, சிறைவாசம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை ஆராயும் ஒரு படைப்பை வழங்கும்.
சமூகத்திலும் மனித உறவுகளிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் இந்த நிகழ்வில் விவாதிக்கப்படும். ஆன்மீகம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், ஊட்டச்சத்து மற்றும் நிலையான வாழ்க்கை போன்ற பிற முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
செப்டம்பர் 20-ஆம் நாள் நிறைவடையும் இந்நிகழ்வின் இறுதி நிகழ்வின் போது அசிசியின் வீதிகளில் பாடகர் குழுக்கள் மற்றும் இசைக்குழுக்களால் பிரான்சிஸ்கன் புகழ்ச்சிப்பாடல்கள் இசைக்கப்படும். அதனைத் தொடர்ந்து பெருங்கோவிலின் மேல் பகுதியில் கிரிகோரியன் வழிபாட்டு பாடலும் புனிதமான பல்லிசைப் பாடல்களும் பாடப்படும்.
வாழ்க்கையை உண்மையாகவே மனிதத்தன்மை கொண்டதாக மாற்றுவது எது என்பது குறித்தும், அதைச் செழிப்புறச் செய்ய எத்தகைய உறவுகள் உதவுகின்றன என்பது குறித்தும் ஆழமாகச் சிந்திப்பதற்கு இந்நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.