தேடுதல்

பேராயர் Nwachukwu அவர்கள் SIGNIS உலக மாநாட்டில் உரையாற்றிய போது. பேராயர் Nwachukwu அவர்கள் SIGNIS உலக மாநாட்டில் உரையாற்றிய போது. 

எண்ணிம உலகில் நற்செய்தியின் சாட்சிகளாக இருங்கள் : பேராயர் Nwachukwu

நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையின் செயலாளர் பேராயர் Fortunatus Nwachukwu, கிறிஸ்தவத் தகவல் தொடர்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதற்கு முன் சீடர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிகாலியில் நடைபெற்ற SIGNIS 2026 உலக மாநாட்டில் பேசிய அவர், மனித மற்றும் ஆன்மீக உருவாக்கம், எண்ணிமத் தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக முக்கியத்துவம் பெற வேண்டும் என்றார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

கிறிஸ்தவத் தொடர்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதற்கு முன்பாக சீடர்களாக மாற வேண்டும் என்றும், மனித மற்றும் ஆன்மீக உருவாக்கத்தை தங்கள் பணியின் மையமாக கொள்ள வேண்டும் என்றும் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையின் செயலாளரான பேராயர் Fortunatus Nwachukwu அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ருவாண்டாவின் கிகாலியில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான சிக்னிஸ் (SIGNIS) உலக மாநாடு மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தின் போது வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு கூறியுள்ள பேராயர்  Nwachukwu அவர்கள்,  இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற எண்ணிம தளங்கள் நற்செய்தி அறிவிப்புக்கான புதிய தளங்களாக மாறியுள்ளன என்றும் கூறினார்.

எனவே, "நற்செய்தியும் இந்தத் தளங்களின் மூலம் அறிவிக்கப்பட்டு மக்களின் இதயங்களைத் தொட வேண்டும்" என்றும், "ஒவ்வொரு கட்டுரையும், படமும், மற்றும் ஒலி-ஒளி படைப்புகளும் வெறுமனே தகவல்களைப் பகிர்வதைத் தாண்டிச் செயல்பட வேண்டும்"  என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"கிறிஸ்தவத் தகவல் தொடர்புப் பணிகள் பாலங்களை அமைக்கவும், நல்லுறவையும் நம்பிக்கையையும் வளர்க்கவும், சந்திப்புகளை ஊக்குவிக்கவும், கடவுளின் அன்பையும் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தையும் அறிவிக்கவும் வேண்டும்" என்றும் குறிப்பிட்டு ள்ளார்.

இளம் தகவல் தொடர்பாளர்களிடம் உரையாற்றிய பேராயர் Nwachukwu அவர்கள், "உங்கள் தளத்தை உருவாக்குவதற்கு முன் உங்கள் மனதை உருவாக்குங்கள்" என்ற ஒரு முக்கிய செய்தியை வழங்கியுள்ளார்.

மேலும்" எண்ணிமத் தளங்களின் தாக்கத்தைத் தேடுவதற்கு முன்பாக அகத்தயாரிப்பு, மனித உருவாக்கம் மற்றும் ஆன்மீக முதிர்ச்சி ஆகியவை வர வேண்டும்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழுவாதம், துருவப்படுத்தல் மற்றும் பிரிவினை ஆகியவற்றைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக ஒற்றுமையையும் சந்திப்பையும் மேம்படுத்தவும், எண்ணிம தொடர்பைப் பயன்படுத்தவும் தகவல் தொடர்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பேராயர் அவர்கள், படைப்பைப் பேணிக்காப்பது என்பதும் அவர்கள் சொல்லும் கதைகளின் இன்றியமையாத பகுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவத் தொடர்பாளர்கள் கதாநாயகர்களாக இருப்பதற்கு முன் சீடர்களாகவும், பிரிவினையை உருவாக்குபவர்களாக இல்லாமல் பாலங்களை அமைப்பவர்களாகவும், இன்றைய எண்ணிம உலகில் நற்செய்தி வழங்கும் நம்பிக்கையின் சான்றுகளாகவும் இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்று கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஆகஸ்ட் 2026, 15:22