மடகாஸ்கரில் திரித்துவச் சபை மறைப்பணியின் நூற்றாண்டு விழா
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மகா தூய திரித்துவம் மற்றும் சிறைப்பட்டோரின் சபை (Trinitarians) மடகாஸ்கரில் தங்களின் 100 ஆண்டு கால மறைபரப்புப் பணியைக் கொண்டாடுகின்றனர். இது நற்செய்தி அறிவிப்பு, மேய்ப்புப் பணி மற்றும் மனித மாண்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஒரு நூற்றாண்டு காலமாக அவர்களின் பணியைக் குறிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இத்தீவில் பணிசெய்ய இந்த சபையின் முதல் ஐந்து திரித்துவச் சபை மறைபரப்பாளர்கள் உரோமிலிருந்து 1926 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று வந்தபோது இந்த சபையின் பணி தொடங்கியது.
சபையின் நிறுவனர்களான மத்தாவின் புனித யோவான் (St. John de Matha) மற்றும் வலோயிஸின் புனித பெலிக்ஸ் (St. Felix of Valois) ஆகியோரின் தூண்டுதலால் ஈர்க்கப்பட்டு, திரித்துவச் சபைத் துறவியர் நற்செய்தி அறிவிப்புடன் மனித சுதந்திரம் மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு பணிசெய்தனர். உள்ளூர் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை மதிக்கும் அதே வேளையில், தொலைதூர கிராமங்களுக்குச் செல்வது, கிறிஸ்தவ சமூகங்களை வலுப்படுத்துவது, மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மேய்ப்புப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிகள் மற்றும் சமூக மையங்களை கட்டுவது ஆகியவற்றில் அவர்களின் மறைபரப்புப் பணி முக்கிய கவனம் செலுத்தியது.
1939 ஆம் ஆண்டில் மியாரினரிவோவில் (Miarinarivo) திருத்தூதர் நிர்வாகப் பகுதி நிறுவப்பட்டதன் மூலம் இவர்களின் மறைபரப்புப் பணி செழித்து வளர்ந்தது, இது இந்தச் சபையிடம் ஒப்படைக்கப்பட்ட ஆப்பிரிக்காவின் முதல் திருஅவைப் பகுதியாகும். இன்று, திரித்துவச் சபைத் துறவியர் 22 மறைமாவட்டங்கள் கொண்ட மடகாஸ்கரில் 12 மறைமாவட்டங்களில் பணி செய்கின்றனர்.
செழித்து வளரும் உள்ளூர் இறை அழைத்தல்கள், வெளிநாடுகளில் சேவை செய்யும் மறைப்பணியாளர்கள் மற்றும் மலகாசி (Malagasy) திருஅவையைச் சேர்ந்த ஐந்து திரித்துவ சபை ஆயர்கள் ஆகியோர் இந்த சபையின் பணிக்குச் சான்றாக விளங்குகின்றனர்.
இந்த சபை தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், பல தலைமுறையாக அர்ப்பணிப்புடன் பணி செய்த மறைப்பணியாளர்களுக்கு நன்றி செலுத்துகிறது. மேலும், இன்றைய கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக எல்லைகளில் நற்செய்தியை அறிவிப்பதற்கான தனது உறுதிப்பாட்டைப் புதுப்பித்து, நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் இரக்கத்தின் அடையாளமாகத் தனது பணியைத் தொடர்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.