தேடுதல்

தய்பே நகரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளுக்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தீ வைத்தனர். தய்பே நகரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளுக்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தீ வைத்தனர்.  (AFP or licensors)

தய்பே கிராமம் பாதுகாப்பு கோரி உலக நாடுகளுக்கு அவசர அழைப்பு!

மேற்கு கரையில் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழும் கடைசி பாலஸ்தீனிய கிராமமான தய்பே, புதிய சட்டவிரோத குடியேற்ற முகாம் அமைக்கும் முயற்சியால் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பையும் புனித பூமியில் அவர்களின் இருப்பையும் உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள பங்குத்தந்தை அருள்பணி பஷார் ஃபவாத்லே அழைப்பு விடுத்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மத்திய கிழக்கில் அமைந்துள்ள, முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய ஒரு பகுதியான மேற்கு கரையில் உள்ள முற்றிலும் கிறிஸ்தவர்கள் மட்டுமே வாழும் கடைசி பாலஸ்தீனிய கிராமமான தய்பே, பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்தக் கிராமத்திற்கு அருகில் இஸ்ரேலிய தரப்பினர் சட்டவிரோத முகாம் ஒன்றை அமைக்கத் தொடங்கியுள்ளதாக அங்குள்ள அருள்பணியாளர் பஷார் ஃபவாத்லே அவர்கள் தெரிவித்துள்ளார்.

"ஜபால் அல்-மசிஸ் பகுதியில் அமையவிருக்கும் இந்த முகாம், மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மிக அருகிலேயே உள்ளது" என்றும் "இதனால் தங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும்"  என்றும், "தங்களது விவசாய நிலங்கள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கான வழிகள் பறிபோகலாம்"  என்றும் உள்ளூர் மக்கள் அஞ்சுகின்றனர். "கிராம மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறும் கட்டாயத்தை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம்" என்றும் "இதனால் அவர்கள் நிலத்தில் ‘ஒரு புதிய யதார்த்தத்தை’ உருவாக்க முயல்கிறார்கள்" என்றும் அருள்பணி ஃபவாத்லே அவர்கள் எச்சரித்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் தூதர்கள், திருஅவைத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டு பிரதிநிதிகளிடம் பல மாதங்களாக முறையிட்ட போதிலும் வன்முறைகள் தொடர்ந்து இடம் பெறுவதாகவும் அருள்பணி. ஃபவாத்லே அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக அங்கே குடியேறியிருப்பவர்கள் உள்ளூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் செல்வதையும் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

"புனித பூமியில் கிறிஸ்தவர்களின் இருப்பைத் தக்கவைக்க வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது, உறுதியான நடவடிக்கைகள் தேவை"  என்று வலியுறுத்திய அருள்பணி ஃபவாத்லே அவர்கள், " அனைத்துலக நாடுகளும் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் "மற்றொரு குடியேற்ற முகாம் அமைக்கப்பட்டால், அது கிராமத்தின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும்"  என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இத்தகைய பயமும் நிச்சயமற்ற சூழலும் நீடித்தபோதிலும், அங்குள்ள பங்கின் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்கிறன. இந்த வாரம், தய்பே கிராமத்தின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ், மெல்கைட் கிரேக்க கத்தோலிக்க மற்றும் இலத்தீன் கத்தோலிக்க சமூகங்கள் இணைந்து நடத்திய கோடைகால முகாமில் 161 குழந்தைகள் பங்கெடுத்துள்ளனர். இது அந்த மக்களின் மனஉறுதியையும் தளராத நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூலை 2026, 12:40