தேடுதல்

2026.07.28 nerikattum alumaigal 28  Allegati

விவிலியத் தேடல்

ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றத் தயாரான இதயமே அவருக்கு உகந்த பலி; நம்பிக்கையுடன் காத்திருப்பவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அன்பு, தாழ்மை, சேவை நிறைந்த வாழ்வின் வழியே ஆண்டவருக்குச் சாட்சியாக வாழ்வோம்.

திருப்பாடல் 40 : 1, 3, 6 - 9

உமது திருவளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

திருத்தொண்டர் அஜிட்டோ சேவியர்

பிரியமான சகோதரர்களே, சகோதரிகளே,

இன்று நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள திருப்பாடல் 40-ஐ தியானிக்கும்போது, திருப்பாடல் ஆசிரியர் நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை வழங்குகிறார்.

  1. ஆண்டவருக்காகக் காத்திருத்தல்
  2. ஆண்டவருக்கு ஏற்ற பலியைச் செலுத்துதல்
  3. ஆண்டவருக்குச் சாட்சியாக வாழ்தல்

1. ஆண்டவருக்காகக் காத்திருத்தல்

நமக்கு ஏதேனும் தேவைகள் ஏற்படும் போதோ, பிரச்சினைகள் வரும் போதோ மட்டுமே நாம் ஆண்டவரைத் தேடுகிறோம். சில நேரங்களில், "எனக்கு யாரும் இல்லை" என்று எண்ணி, தனிமையில் தவித்து, வாழ்க்கையையே முடித்துக்கொள்ள நினைக்கும் அளவிற்கும் சிலர் சென்று விடுகின்றனர். ஆனால் ஆண்டவர் கூறுகிறார்: "உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்." (மத்தேயு 28:20) இதையே திருப்பாடல் ஆசிரியரும் நமக்கு நினைவூட்டுகிறார். எனவே நாம் அச்சப்படத் தேவையில்லை; தயங்கத் தேவையில்லை. ஆண்டவரே நம் உயிர், நம் பாதுகாப்பு, நம் நம்பிக்கை. ஆனால் நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: "ஆண்டவரே, நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை" என்று சொல்லத் தயாராக இருக்கிறோமா? அல்லது, "நான், எனது, என்னுடையது" என்ற சுயநல வாழ்க்கைக்குள் நம்மைச் சுருக்கிக்கொண்டு, "நான் நன்றாக இருந்தால் போதும்; என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும்" என்று வாழ்கிறோமா? திருப்பாடல் ஆசிரியர் தெளிவாகக் கூறுகிறார்: "ஆண்டவர் உனக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார். அச்சப்படாதே; நம்பிக்கையுடன் காத்திரு." ஆண்டவர் இன்று நம்மை அழைக்கிறார்: "மகனே! மகளே! நான் உனக்காக எப்போதும் காத்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வா."

2. ஆண்டவருக்கு ஏற்ற பலி

ஆண்டவர் எப்படிப்பட்ட பலியை விரும்புகிறார்? வெறும் காணிக்கைகள், நன்கொடைகள், தினமும் திருப்பலியில் பங்கேற்பது, அல்லது வெளிப்புற சமயச் சடங்குகள் மட்டுமே ஆண்டவருக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை. திருப்பாடல் 51 கூறுகிறது: "ஆண்டவருக்கு ஏற்ற பலி நொறுங்கிய உள்ளம்." ஆண்டவர் எதிர்பார்ப்பது மனந்திரும்பிய இதயத்தை. "ஆண்டவரே! நான் பாவி. என்னை மன்னியும். நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லை. என் வாழ்வையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும்." என்று முழு மனதோடு அவரை நாடுகின்ற இதயமே ஆண்டவருக்கு உகந்த பலியாகும். நாம் தினமும் திருப்பலியில் பங்கேற்கலாம். பாவமன்னிப்பு அருளடையாளத்தைப் பெறலாம். காணிக்கைகளையும் செலுத்தலாம். ஆனால் ஆண்டவர் கேட்பது:"மகனே! மகளே! உன் இதயம் எனக்குச் சொந்தமானதா? உன்னை முழுமையாக எனக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறாயா?" என்பதைத்தான்.

3. ஆண்டவருக்குச் சாட்சியாக வாழ்தல்

திருப்பாடல் ஆசிரியர் நமக்கு வழங்கும் மூன்றாவது அழைப்பு, ஆண்டவருக்குச் சாட்சியாக வாழ வேண்டும் என்பதாகும். நமக்குக் கிடைத்துள்ள பட்டம், பதவி, பொறுப்பு ஆகியவற்றைப் பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் ஆண்டவர் நினைவூட்டுகிறார்: "இவை அனைத்தையும் உனக்குக் கொடுத்தது நான்தான். ஆனால் நீ என்னை மறந்து, சுயநலமாக வாழ்கிறாய்." ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார்: "நீ எனக்குச் சாட்சியாக வாழ்கிறாயா?" ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது அவருக்காக நீ குரல் கொடுக்கிறாயா? தேவையில் இருப்பவருக்கு உதவிக்கரம் நீட்டுகிறாயா? அன்பு, இரக்கம், மன்னிப்பு, நீதியுடன் வாழ்கிறாயா? இதுவே ஆண்டவருக்குச் சாட்சியாக வாழ்வதாகும்.

அன்பானவர்களே,

இந்த மூன்று அழைப்புகளையும் நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வோம்.

  • ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
  • நொறுங்கிய மனதுடன் நம்மை அவருக்கு அர்ப்பணிப்போம்.
  • அன்பிலும் சேவையிலும் ஆண்டவருக்குச் சாட்சியாக வாழ்வோம்.

ஜெபம்

இறைவா, எங்களைப் படைத்து, பராமரித்து, வழிநடத்தி வரும் பரலோகத் தந்தையே! இன்று எங்களையும் எங்கள் குடும்பங்களையும் உமது திருப்பாதங்களில் அர்ப்பணிக்கிறோம். ஆண்டவரே, நீர் விரும்புவது நொறுங்கிய இதயமும் மனந்திரும்பிய உள்ளமுமே என்பதை உணரச் செய்க. எங்களுக்கு உள்ள அனைத்தும் உம்முடைய அருள்கொடைகளே என்பதை உணரும் தாழ்மையான மனதைத் தாரும். உம்மை நம்பி வரும் அனைவரையும் ஆசீர்வதியும். எங்கள் வாழ்வு முழுவதும் உமக்குச் சாட்சியாக வாழும் வரத்தையும், உமது சித்தத்தின்படி நடக்கும் அருளையும் எங்களுக்குத் தந்தருளும். எங்கள் ஜெபங்கள் அனைத்தையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மிடம் மன்றாடுகிறோம். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 14:32