தேடுதல்

விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

திருப்பாடல் 44, துன்பங்களிலும் தோல்விகளிலும் மனம் தளராமல், இறைவனிடமே நம் வேதனைகளை எடுத்துச் செல்ல அழைக்கிறது. இறைவன் முன்பு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, அவரது திருவுளத்தை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும்போது அவர் நம்மை வழிநடத்துகிறார். துன்பங்களை மனிதர்களிடம் புலம்புவதற்குப் பதிலாக, இறைவனிடம் ஒப்படைத்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.

திபா 44 : 9 - 10, 13 - 14, 23 - 24

உமது பேரை முன்னிட்டு, ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.

அருள்பணி. ரிச்சர்டு, SDB

இன்றைய திருப்பாடல் நமக்கு ஒரு ஆழமான ஆன்மீகப் பாடத்தை கற்றுத்தருகிறது. திருப்பாடல் ஆசிரியர், போரில் தோற்கடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்த சூழலை எடுத்துரைக்கிறார். இன்றைய பகுதிக்கு முந்தைய வசனங்களில், இறைவன் எவ்வாறு தங்கள் மூதாதையரை வழிநடத்தி, பாதுகாத்து, வெற்றிபெறச் செய்தார் என்பதை நினைவுகூர்கிறார்கள். ஆனால் இன்றைய வசனங்களில், அந்த வல்லமையான செயல்களை நினைத்துப் பார்த்தபின், தாங்கள் தற்போது அனுபவிக்கும் துன்பங்களையும் அவமானங்களையும் இறைவனிடம் மனம் திறந்து கூறுகிறார்கள். "இறைவனின் பிரசன்னம் எங்களோடு இல்லை; அதனால் எதிரிகளிடம் தோல்வியடைந்தோம்; அவமானத்திற்கும் பழிச்சொல்லுக்கும் ஆளானோம்" என்று அவர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். இறுதியில், தங்களின் துயரத்தை நீக்குமாறு இறைவனிடம் மன்றாடுகின்றனர்.

அன்பிற்கினியவர்களே, இங்கே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்னவென்றால், இஸ்ரயேல் மக்கள் தங்கள் துன்பங்களைப் பற்றி இறைவனிடம் கூறினார்கள்; ஆனால் இறைவனைப் பற்றி மற்றவர்களிடம் புலம்பவில்லை. இதுவே நமக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். ஆனால் நம்மில் பலர், "ஏன் எனக்கு மட்டும் இந்தத் துன்பம்?", "ஏன் கடவுள் என்னை மட்டும் இவ்வாறு சோதிக்கிறார்?" என்று இறைவனைப் பற்றி மற்றவர்களிடம் முறையிடுகிறோம். ஆனால் நம் வேதனைகளை இறைவனிடம் எடுத்துச் சொல்லுவதில் பல நேரங்களில் தவறிவிடுகிறோம். நம் வாழ்வில் வரும் துன்பங்களும், தோல்விகளும், அவமானங்களும் வீணானவை அல்ல. அவற்றின் வழியாகவும் இறைவன் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார். நம்முடைய எண்ணங்கள் வேறாக இருந்தாலும், இறைவனின் திட்டம் எப்போதும் நன்மைக்கே உரியது என்பதை நாம் நம்ப வேண்டும்.

எனவே, துன்பங்களைப் பார்த்து மனம் உடையாமல், அவற்றின் வழியாக இறைவன் என்ன கற்பிக்க விரும்புகிறார் என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டும். அவற்றை ஏற்றுக்கொண்டு, இறைவனின் திருவுளத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் நம்மை நிச்சயமாக வழிநடத்துவார். இதைத்தான் இஸ்ரயேல் மக்களும் செய்தார்கள். இறைவன் முன்பு செய்த நன்மைகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த அவர்கள், தங்களின் தற்போதைய வேதனைகளையும் அவரிடமே எடுத்துச் சென்றார்கள். அதுபோல நாமும் நம் துயரங்களை மனிதர்களிடம் மட்டும் கூறாமல், இறைவனிடமும் மனம் திறந்து பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சிந்தனையின் போது திருவள்ளுவரின் குறளும் நமக்கு நினைவிற்கு வருகிறது:

"வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்."
(குறள் 622)

அதாவது, வெள்ளம்போல் பெரிதாகத் தோன்றும் துன்பங்கள்கூட, அறிவுடையவன் மனம் தளராமல் இருந்தால் அவை மறைந்துபோகும். அதுபோல, இறைவனின் பாதுகாப்பை நம்பி, அவருடைய வழிநடத்துதலின்படி வாழும்போது நம்முடைய துன்பங்களையும் அவர் நீக்குவார். எனவே, நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்பங்களை இறைவனின் திருவுளமாக ஏற்றுக்கொண்டு, அவற்றின் வழியாக இறைவனின் மகிமையை உலகிற்கு எடுத்துக்கூறுபவர்களாக வாழ்வோம்.

ஜெபம்

அன்பு இறைவா, எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள், கவலைகள், அவமானங்கள் ஆகியவற்றைக் கண்டு மனம் தளராமல், உமது பாதுகாப்பிலும் வழிநடத்துதலிலும் உறுதியான நம்பிக்கையுடன் வாழும் அருளை எங்களுக்குத் தாரும். எங்கள் வாழ்வின் எல்லா சூழல்களிலும் உம்மை நம்பி, உமது மகிமையை வெளிப்படுத்தும் சாட்சிகளாக வாழ எங்களை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஜூலை 2026, 13:25