தேடுதல்

விவிலியத் தேடல் விவிலியத் தேடல்  

விவிலியத் தேடல்

ஆண்டவரின் அருளே நம் வாழ்வின் உண்மையான வெற்றியின் ஆதாரம்; எல்லாப் புகழும் அவருக்கே உரியது. நமக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் மன்றாடும் ஜெபமே இறைவனுக்குப் பிரியமான உண்மையான ஜெபமாகும்.

திபா 21 : 1 – 6

உமது வல்லமையில் ஆண்டவரே, அரசர் பூரிப்படைகின்றார்.

திருத்தொண்டர் அஜிட்டோ சேவியர்

பிரியமான சகோதரர்களே, சகோதரிகளே,

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள இறைவார்த்தை திருப்பாடல் 21-இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இந்தத் திருப்பாடல், தாவீது அரசர் போரில் வெற்றி பெறுவதற்காக மக்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுவதையும், வெற்றியைத் தொடர்ந்து தாவீது அரசர் மகிழ்ச்சியோடும் நன்றியோடும் ஆண்டவரைப் புகழ்வதையும் எடுத்துரைக்கிறது. மனித பார்வையில் தாவீது அரசருக்கு இணையான அரசர் வேறு யாருமில்லை என்று தோன்றலாம். ஆனால், இந்தத் திருப்பாடலை ஆழமாக தியானிக்கும்போது மூன்று முக்கியமான உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன:

  1. தாவீதின் வழிமரபில் வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அரசு என்றென்றும் அழியாதது.
  2. உண்மையான புகழும் மாட்சியும் ஆண்டவருக்கே உரியது.
  3. உண்மையான ஜெபம் என்பது மற்றவர்களுக்காகச் செய்யப்படும் மன்றாட்டாகும்.

பிரியமானவர்களே, நம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? "ஆண்டவரே, எனக்கு இதைக் கொடுங்கள், அதைக் கொடுங்கள்" என்ற கோரிக்கைகளால் மட்டுமே நிறைந்திருக்கிறதா? சில நேரங்களில் நாம் வங்கியில் பணம் முதலீடு செய்து அதன் வட்டியை எதிர்பார்ப்பதுபோல், ஜெபத்தையும் ஒரு பரிமாற்றமாக நினைத்து, "நான் ஜெபித்தேன்; ஆகவே ஆண்டவர் எனக்குத் தர வேண்டும்" என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையான ஜெபம் அப்படியல்ல. ஆண்டவர் நம்முடன் இருக்கிறார்; அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் செய்வார் என்ற முழு நம்பிக்கையுடன், பிறருக்காக இறைவனிடம் மன்றாடுவதே உண்மையான ஜெபமாகும். ஒருவர் நோயுற்றிருக்கும்போது அவருக்கு மருந்து கொடுத்தால்தான் அவர் குணமடைவார். அதுபோல, ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது அவருக்கு உதவிக்கரம் நீட்டினால்தான் அவர் அந்தத் துன்பத்திலிருந்து மீள முடியும். அதேபோல், பிறரின் தேவைகளை நம் ஜெபத்தில் சுமந்து ஆண்டவரிடம் மன்றாடும்போது, அந்த ஜெபம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறது.

இன்றைய திருப்பாடல் இதையே தெளிவாக எடுத்துரைக்கிறது. தாவீது அரசர் தனது வல்லமையால் மட்டுமல்ல, மக்களின் இறைநம்பிக்கையாலும், அவர்கள் எழுப்பிய ஜெபங்களாலும் வெற்றி பெற்றார். மக்கள் "தாவீது வெற்றி பெறட்டும்" என்று மட்டும் வேண்டவில்லை; "ஆண்டவரே, உமது வல்லமையால் அவர் வெற்றி பெறட்டும்" என்று மன்றாடினர். உலக வரலாற்றில் சிறந்த அரசர்களில் ஒருவராக தாவீது அரசர் போற்றப்படுகிறார். ஆனால் எல்லா அரசர்களுக்கும் மேலான ஒரே அரசர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே. அவர் உண்மையான அரசர்; உயிருள்ள இறைவன். நம் வாழ்வின் அனைத்தையும் அவரே வழிநடத்துகிறார். ஆனால் இன்று பல நேரங்களில் நாம் பணம், புகழ், பதவி, அதிகாரம் ஆகியவற்றையே நம் வாழ்க்கையின் மையமாக்கி விடுகிறோம். அவை நிலையானவை அல்ல என்பதை மறந்து விடுகிறோம். அடுத்த நொடி என்ன நிகழும் என்பதைக் கூட நாம் அறியாதவர்கள். எனவே, "ஆண்டவரே, நீரே என் உயிர் மூச்சு; நீரே என் செல்வம்; நீரே என் வாழ்வின் ஆதாரம்" என்ற உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். திருப்பாடலில் மக்கள் தாவீது அரசரின் வெற்றியைப் பாடுவதைப் போலத் தோன்றினாலும், அதன் உண்மையான நோக்கம் ஆண்டவரின் மகிமையையும் மாட்சியையும் அறிவிப்பதாகும்.

நாமும் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைகிறோம். ஆனால் "இதை நான் செய்தேன்", "என்னால் முடிந்தது" என்று நம்மையே முன்னிறுத்துகிறோம். உண்மையில், ஆண்டவரின் அருளின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை மறந்துவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும், வாழும் ஒவ்வொரு நொடியும், செய்கிற ஒவ்வொரு நன்மையும் ஆண்டவரின் அருட்கொடையே. எனவே, நம் வாழ்வு முழுவதும் அவருடைய மகிமைக்காகவே அமைய வேண்டும்.

இன்று இந்தத் திருப்பாடலைத் தியானிக்கும்போது, நம்மையே கேட்டுக்கொள்வோம்:

"ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்த இந்த வாழ்வை நான் எனக்காக வாழ்கிறேனா? அல்லது உமக்காக வாழ்கிறேனா?"

இந்தக் கேள்விக்கான பதிலை நம் வாழ்க்கையால் அளிப்போம்.

செபம்

இறைவா, எங்களைப் படைத்து பராமரித்து வருகின்ற பரலோகத் தந்தையே, நீரே எங்கள் உயிர் மூச்சு. நீரே எங்கள் செல்வம். நீர் இல்லாமல் எங்களால் எதையும் செய்ய முடியாது. உமது ஆசீர்வாதத்தை நாடி வாழும் அனைத்து மக்களையும் தொட்டு ஆசீர்வதியுங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உமது மகிமைக்கும் மாட்சிமைக்கும் உரியதாக அமைய அருள் புரியுங்கள். உமது ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களால் அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதியாக நிலைத்திருக்கச் செய்யும். எங்கள் இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மிடம் வேண்டுகிறோம்.

ஆமென்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஜூலை 2026, 13:36