அருளாளர் பட்டமளிப்பு விழாவுக்கு தயாராகும் வியட்நாம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
தெற்கு வியட்நாமில் உள்ள தாக் சேய் திருப்பயண மையத்தில் ஜூலை 2, வியாழனன்று இடம்பெறவுள்ள அருள்பணி பிரான்சிஸ் சேவியர் துரோங் பூ தியெப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருளாளர் பட்டமளிப்பு விழாவிற்கான இறுதி ஏற்பாடுகளை வியட்நாமிய கத்தோலிக்கர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வியட்நாமில் இருந்து மட்டுமல்லாமல் இதர ஆசிய நாடுகள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள வியட்நாமிய சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 100,000 திருப்பயணிகள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய கத்தோலிக்கக் கூட்டங்களில் ஒன்றாக அமையவுள்ளது.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சிறப்புத் தூதர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த அருளாளர் அறிவிப்புத் திருப்பலியில், வியட்நாம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான அருள்பணியாளர்களும், ஏறத்தாழ 70 ஆயர்கள், பேராயர்கள் மற்றும் கர்தினால்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான் தோ மறைமாவட்டம், இந்த பிரம்மாண்டமான கூட்டத்திற்கு வசதியாக பெரிய கூடாரங்கள், எல்.இ.டி (LED) திரைகள், ஒலி அமைப்புகள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விரிவான பணிகளை நிறைவு செய்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்கும் திருப்பயணிகளுக்காக கையால் செய்யப்பட்ட ஏறத்தாழ 30,000 ஜெபமாலைகள், 50,000 புனிதப் படங்கள் மற்றும் அருள்பணி தியெப் பற்றிய ஒரு நினைவுப் புத்தகம் ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளன.
"ஒன்றாக இருத்தல்" (Being Together) என்ற குறிக்கோளின் வழிகாட்டுதலோடு, 280-க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் ஒன்றிப்பு மற்றும் பணி வாழ்வின் உணர்வோடு இந்த விழா சிறக்க உழைத்துள்ளனர்.
பாதுகாப்பான மற்றும் பக்திநிறைந்த கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகள் போக்குவரத்து, நலவாழ்வு, பாதுகாப்பு மற்றும் அவசரக்கால சேவைகளை ஒருங்கிணைத்துள்ளனர். இந்த அருளாளர் அறிவிப்பு விழா வியட்நாமின் கிட்டத்தட்ட
500 ஆண்டுகால கத்தோலிக்க வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.