நிலநடுக்கத்தால் மருத்துவமனை இடிந்த பிறகும் மருத்துவப் பணியைத் தொடரும் வெனிசுலா அருள்சகோதரிகள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, லா குவைராவில் உள்ள சான் ஜோஸ் மருத்துவமனையின் கட்டமைப்பு மிகக்கடுமையாக சேதமடைந்து இனி பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலுக்குப் பதிலளிக்கும் விதமாக, மைகுவெட்டியாவின் ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபையின் அருள்சகோதரிகள் அத்தியாவசிய மருத்துவச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்காக, சேதமடைந்த கட்டிடத்திற்கு எதிரே உள்ள சதுக்கத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளனர்.
லா குவைராவில் 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலும், மேலும் பல உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதே இந்த சமூகத்தின் மிகப்பெரிய எதிர்நோக்கு என்று இந்த சபையின் தலைமை அருள்சகோதரி மரியா யிராய்டா மோரா சான்செஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பரவலான பாதிப்பை ஏற்படுத்திய இந்த இழப்பைப் பற்றி பேசிய அவர், பல குடும்பங்கள் தங்களுக்குப் பிரியமானவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பதாகவும் விவரித்துள்ளார்.
"இந்த சபையின் சகோதரிகள் மூன்று அவசரக்கால நிவாரண முகாம்களுக்குச் சென்று, அங்கு தண்ணீர், உணவு, மருந்துகள் மற்றும் ஆன்மீக ஆதரவையும் வழங்கி வருகின்றனர்" என்றும் "இந்த சோகத்திற்கு மத்தியிலும், உள்ளூர் சமூகம் தனது நம்பிக்கையின் மூலம் தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது" என்றும் சகோதரி மோரா அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் லா குவைராவின் ஆயர் தலைமையில் திறந்தவெளியில் இடம்பெற்ற திருப்பலிக்காக மக்கள் பலர் ஒன்றுகூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடாரங்களின் கீழ் இயங்கும் இந்தத் தற்காலிக மருத்துவமனை இத்தாலிய செஞ்சிலுவை சங்கம், AVESSOC மற்றும் தன்னார்வ மருத்துவர்களின் ஆதரவுடன் இயங்குகிறது. மருத்துவக் குழுவினர் காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதுடன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கால்-கை வலிப்பு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதையும் உறுதி செய்து வருகின்றனர்.
தூய்மை குடிநீர், மருந்துகள் மற்றும் நலவாழ்வு வசதிகளின் பற்றாக்குறையைக் குறிப்பிட்டு, நோய் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சகோதரி மோரா அவர்கள் வளர்ந்து வரும் பொது நலவாழ்வு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளார்.
138 ஆண்டுகளாக லா குவைரா மக்களுக்குச் சேவை செய்து வரும் சான் ஜோஸ் மருத்துவமனை, இந்த சபையின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது.
கட்டிடத்தை இழந்த சூழலில், "மருத்துவமனை என்பது வெறும் சுவர்கள் அல்ல, மாறாக தொடர்ந்து நம்பிக்கையுடனும் இரக்கத்துடனும் சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அருள்சகோதரிகள் தான்" என்று சகோதரி மோரா அவர்கள் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.