தேடுதல்

புர்கினா பாசோவில் உள்ள இறைமக்கள் புர்கினா பாசோவில் உள்ள இறைமக்கள் 

ஆப்பிரிக்காவில் உள்ள திருஅவைக்கு ஆதரவளிக்க அமெரிக்க கத்தோலிக்கர்களுக்கு ஆயர்கள் அழைப்பு

ஆப்பிரிக்கக் கண்டத்தில் நற்செய்தி அறிவிப்பு, அமைதி, தலைமைத்துவ உருவாக்கம் மற்றும் மேய்ப்புப் பணிகளை வலுப்படுத்தும் 'ஆப்பிரிக்காவில் உள்ள திருஅவைக்கான ஒருமைப்பாட்டு நிதிக்கு' ஆதரவளிக்குமாறு அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் திருஅவையின் மேய்ப்புப் பணிகளையும் வளர்ச்சியையும் வலுப்படுத்தும் நோக்கில், ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 'ஆப்பிரிக்காவில் உள்ள திருஅவைக்கான ஒருமைப்பாட்டு நிதிக்கு' (Solidarity Fund for the Church in Africa) ஆதரவளிக்குமாறு, அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (USCCB) அமெரிக்க கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருத்தந்தை அவர்கள் ஆப்பிரிக்காவிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தைத் தொடர்ந்து, அமைதி, நல்லிணக்கம், நற்செய்தி அறிவிப்பு மற்றும் மேய்ப்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் திருத்தந்தையுடன் இணைந்து செயல்படுமாறும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டில், நற்செய்தி அறிவிப்பு, இறையழைத்தல்கள், தலைமைத்துவ உருவாக்கம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளித்து, 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 97 மானியங்களை இந்த நிதியம் வழங்கியது.

ஆப்பிரிக்காவில் உள்ள திருஅவைக்கான அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் துணைக்குழுத் தலைவர் பேராயர் தாமஸ் சின்குலா அவர்கள், இந்த ஒருமைப்பாட்டு நிதியம் அமைதியை வளர்க்கவும், நற்செய்தி அறிவிப்பு, அருள்பணியாளர் மற்றும் தலைமைத்துவ உருவாக்கம் உள்ளிட்ட திருஅவையின் பல்வேறு மேய்ப்புப் பணிகளை வலுப்படுத்தவும் முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஆப்பிரிக்காவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் விடுத்துள்ள அழைப்பிற்கு பதிலளிக்கும் வகையில், இந்த நிதிக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த மானியங்கள், மாலியில் உள்ள இளைஞர்களுக்கான விவிலிய முகாம், சூடானில் உள்ள 223 மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa) பகுதி முழுவதும் மனித வர்த்தகத்திற்கு எதிரான பயிலரங்குகள், புர்கினா பாசோவில் நிலையான திருஅவை மேலாண்மை மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள மரியானிஸ்ட் அருடள்சகோதரிகளின் மறைப்பணி முயற்சிகள் போன்ற பரந்த அளவிலான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்துள்ளன; அத்துடன் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நற்செய்தி அறிவிக்கும் தன்னார்வளர்கள் மிதிவண்டிகள் மூலம் தொலைதூர சமூகங்களை சென்றடையவும் இது உதவியுள்ளது.

பங்கு காணிக்கைகள் மற்றும் இணையவழி நன்கொடைகள் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள திருஅவைக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஆயர்கள் கத்தோலிக்கர்களை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூலை 2026, 13:59