திரிகடுகம் திரிகடுகம் 

திரிகடுகம்

பகைவரின் முன் ஆடம்பரத்தை வெளிக்காட்டுவது அறிவல்ல; பணிவும் விவேகமும் தான் உண்மையான பாதுகாப்பும் செல்வமும் ஆகும். நம்மை வெறுப்பவர்களையும் அன்புடனும் உயர்ந்த மனப்பான்மையுடனும் அணுகும்போது, அதுவே அறவாழ்வின் சிறந்த சாட்சியாக மாறுகிறது.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

அன்பிற்கினிய நெஞ்சங்களே, வணக்கம்!

திரிகடுகப் பயணத்தில் இணைந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

"இறப்பச் சிறியவர் இன்னா செயினும்,
பகைவர் முன் செல்வம் காட்டலும்,
கோலின்றிச் சேர்ந்த மாட்டுத் தொகைக்குள் செல்லலும்,
முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கூடலும் –
இம்மூன்றும் சாவுறுவான் தொழில்."

இந்தச் செய்யுள், அழிவை வரவழைக்கும் மூன்று செயல்களை எடுத்துரைக்கிறது. முதலாவதாக, பகைவர்களின் முன்னால் தன்னுடைய செல்வச் செழிப்பையும் ஆடம்பரத்தையும் வெளிக்காட்டிக் கொள்வது. இது அவர்களின் பொறாமையையும் பகையையும் மேலும் தூண்டக்கூடிய செயலாகும். இரண்டாவதாக, பெரிய பசுமாட்டுக் கூட்டத்திற்குள் கையில் கோல் ஏதும் இல்லாமல் நுழைவது. இது தன்னையே ஆபத்தில் தள்ளிக்கொள்ளும் செயலாகும். மூன்றாவதாக, ஏற்கனவே நம்மை வெறுத்து, காயப்படுத்த நினைக்கும் ஒருவரை முழுமையாக நம்பி, அவருடன் நெருங்கிய உறவு கொள்வது. இதுவும் அழிவையே ஏற்படுத்தும்.

இந்த மூன்று செயல்களும் இறுதியில் தீமையையே தரும் என்று நல்லாதனார் எச்சரிக்கிறார். இதில் குறிப்பாக முதல் கருத்து மிகவும் சிந்திக்க வேண்டியதாகும். பகைவர்களின் முன்னால் தன் செல்வத்தை வெளிப்படுத்திக் காட்ட வேண்டாம் என்பதே அதன் சாரம். இதே கருத்தை நினைவூட்டும் வகையில், இயேசு கூறுகிறார்:

"பன்றிகளின் முன் முத்துக்களை வீசாதீர்கள்."

ஏனெனில், அவை அந்த முத்துக்களின் மதிப்பை உணராது; மாறாக அவற்றை மிதித்துவிட்டு, நம்மீதே பாயக்கூடும். அதுபோலவே, நம்மை வெறுப்பவர்களின் முன்னால் நம் வளத்தையும் பெருமையையும் வெளிப்படுத்துவது, அவர்களுடைய பகையுணர்வை அதிகரிக்கவே செய்யும்.

அறநூல்கள் கூறுகின்றன:

"வழி நோக்கான், வாய்ப்பினைச் செய்யான்,
பள்ளி நோக்கான், பண்பிலன் – பற்றார்க்கு இனிது."

அதாவது, சூழ்நிலையை அறிந்து செயல்படாதவனும், நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தாதவனும், பண்பில்லாதவனும் இறுதியில் எதிரிகளுக்கே சாதகமாகிவிடுகிறான். எனவே, நம்மை அழிக்க நினைப்பவர்களின் நடுவில், அவர்களைச் சீண்டும் வகையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது அறிவுடைய செயல் அல்ல. அது அவர்களின் வெறுப்பை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

அதற்குப் பதிலாக, பணிவே நமக்கு உண்மையான செல்வம்.

திருக்குறள் கூறுகிறது:

"எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து."

எந்த உயர்ந்த நிலையிலிருந்தாலும் – செல்வம், கல்வி, அதிகாரம், புகழ், பதவி எதுவாக இருந்தாலும் – பணிவுடன் வாழ்வதே மனிதனை உயர்வாக்குகிறது. அந்தப் பணிவே பகைவரின் மனதையும் மாற்றக்கூடிய ஆற்றல் உடையது. எனவே, நம்மை வெறுப்பவர்களை மேலும் சீண்டும் வகையில் நடந்து கொள்ளாமல், தேவையான நேரத்தில் அவர்களுக்கே உதவக்கூடிய உயர்ந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே உண்மையான மனிதநேயமும் அறவாழ்வும் ஆகும்.

இன்றைய சொல்லறிவு: "ஐஸ்வர்யம்"

"ஐஸ்வர்யம்" என்பது சமஸ்கிருதச் சொல். இதன் பொருள் பெருஞ்செல்வம், வளமை, செழிப்பு என்பதாகும். இன்றும் பலரும், குறிப்பாக பிற கிறிஸ்தவச் சபைகளில், இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதைக் காணலாம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

02 ஜூலை 2026, 12:29