2025ஆம் ஆண்டு சியாங் மாயில் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைக்கும் ஆயர் அர்போன்றதானா (கோப்புப் படம்) 2025ஆம் ஆண்டு சியாங் மாயில் யூபிலி ஆண்டைத் தொடங்கி வைக்கும் ஆயர் அர்போன்றதானா (கோப்புப் படம்) 

சியாங் மாய் மறைமாவட்டத்தின் 5-வது ஆயராக பீட்டர் சுபோட் ரோக்சுஜாரிட் பதவியேற்பு!

தாய்லாந்தின் சியாங் மாய் மறைமாவட்டத்தின் ஐந்தாவது ஆயராக பீட்டர் சுபோட் ரோக்சுஜாரிட் அவர்கள் ஜூலை 29 அன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள திரு இருதய‌ப் பள்ளியில் ஜூலை 29, புதனன்று இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியின் போது, சியாங் மாய் மறைமாவட்டத்தின் ஐந்தாவது ஆயராக பீட்டர் சுபோட் ரோக்சுஜாரிட் அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். பேராயர் பிரான்சிஸ் சேவியர் வீரா அர்போண்ட்ரதனா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், தாய்லாந்து முழுவதிலும் இருந்து வந்த ஆயர்கள், தாய்லாந்திற்கான திருத்தந்தையின் அரசுத் தூதர் பேராயர் பீட்டர் பிரையன் வெல்ஸ், நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையின் பேராயர் சாமுவேல் சன்கல்லி, நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டில் பாங்காக் பேராயராக வீரா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த வெற்றிடத்தை இந்தப் பதவியேற்பு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த வழிபாட்டின் போது, ஆயர் சுபோட் தனது மேய்ப்புப் பணியின் அடையாளங்களான ஆயர் மோதிரம், ஆயரின் தலைச்சீரா மற்றும் செங்கோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார்.

சியாங் மாய் மறைமாவட்டம் மியான்மர் எல்லையில் உள்ள நான்கு மாநிலங்களில் பரவியுள்ளது. மேலும் இது கரேன், ஹ்மாங், லாஹு, அக்கா மற்றும் லிசு மக்கள் உள்ளிட்ட பல்வேறு இன சமூகங்களின் தாயகமாக விளங்குகிறது. இந்தப் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், நிகழ்வில் பல உள்ளூர் மொழிகளில் பாடல்கள் பாடப்பட்டன, அத்துடன் இறைமக்கள் பலர் தங்களது பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனர்.

"அன்பு அனைத்து இதயங்களையும் ஒன்றிணைக்கிறது" ("Caritas Omnia Corda Unit") என்ற ஆயர் விருதுவாக்குடன், வறுமை, மனித வர்த்தகம், நாடற்ற நிலை மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் உலக நாட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்களுக்கு மத்தியில் ஆயர் சுபோட் தனது பணியைத் தொடங்குகிறார். இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான இறைமக்களின் மகிழ்ச்சியான பங்கேற்பானது, வடக்கு தாய்லாந்தில் உள்ள திருஅவையின் எதிர்காலம் குறித்த புதிய நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஜூலை 2026, 13:47