2025ஆம் ஆண்டுக்கான தலித்தா கும் அமைப்பின் அறிக்கை 2025ஆம் ஆண்டுக்கான தலித்தா கும் அமைப்பின் அறிக்கை  (Talitha Kum International)

இணையவழி மோசடிகள் மூலம் மனித வர்த்தகம் அதிகரிப்பு: தலித்தா கும் அமைப்பு

உலகளாவிய மனித வர்த்தகத்திற்கு எதிரான நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான தலித்தா கும் அமைப்பின் அறிக்கை, எண்ணிம தளங்கள் மற்றும் போலி வேலைவாய்ப்புகள் வழியாக மனித வர்த்தகம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

எண்ணிம தளங்கள் மற்றும் மோசடி வலைப்பின்னல்கள் மூலம் மனித வர்த்தகம் இணையதளத்தில் அதிகரித்து வருவதாக தலித்தா கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூலை 30 அன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகளாவிய மனித வர்த்தகத்திற்கு எதிரான நாளை முன்னிட்டு, "மோசடி வலையில் சிக்கியவர்கள்" என்ற கருப்பொருளில் அனைத்துலக தலித்தா கும் அமைப்பு வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மனித வர்த்தக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 5 கோடி மக்கள் நவீனகால அடிமைத்தனத்தில் சிக்கியுள்ளதுடன், அதன்மூலம் ஆண்டுக்கு 236 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சட்டவிரோத இலாபம் ஈட்டப்படுவதாக, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் அனைத்துலக புலம்பெயர்வு அமைப்பு (IOM) ஆகியவற்றின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலித்தா கும் அமைப்பின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளர் சகோதரி அப்பி அவெலினோ அவர்கள், சிறந்த வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க, மனித வர்த்தகத்தில் ஈடுபடுவோர் இப்போது போலி இணையதள வேலைவாய்ப்புகளையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் "பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்ற பிறகுதான் அந்த வேலைகள் மோசடியானவை என்பதையும், அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படுவதையும், அவர்கள் வலுக்கட்டாயமாகச் சுரண்டப்படுவதையும் உணருகிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித வர்த்தகத் தடுப்பு, கல்வி, விழிப்புணர்வுப் பரப்புரை மற்றும் மீட்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு ஆதரவு ஆகிய பணிகளின் மூலம், 2025ஆம் ஆண்டில் தலித்தா கும் அமைப்பு 12.1 இலட்சம் பேரைச் சென்றடைந்துள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 29.6 விழுக்காடு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இணையவழி மனித வர்த்தகத்தைத் தடுக்கும் நோக்கில், மனித வர்த்தகத்தை அடையாளம் கண்டு அதைத் தடுக்க சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளைஞர்களை மனித வர்த்தகத்திற்கு எதிரான தூதர்களாக தலித்தா கும் அமைப்பு பயிற்றுவித்து வருகிறது.

மேலும், எண்ணிம வழி நடைபெறும் சுரண்டல்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உள்ளிட்ட தகவல் தொடர்பு ஊடகங்களையும் இவ்வமைப்பு திறம்படப் பயன்படுத்தி வருகிறது.

மனித வர்த்தகத்திற்கு எதிரான முயற்சிகளின் மையமாக மீட்கப்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு நீண்டகால ஆதரவு மற்றும் மீள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் சகோதரி அப்பி அவர்கள் வலியுறுத்தினார்.

வறுமை, சமத்துவமின்மை மற்றும் மோதல்கள் போன்ற மனித வர்த்தகத்திற்கான முக்கிய காரணங்களை உலகளாவிய ஒத்துழைப்பு, கல்வி மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் களைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, "யாரையும் ஒருபோதும் ஒரு விற்பனைப் பொருளாக நடத்தக் கூடாது" என்ற தலித்தா கும் அமைப்பின் கொள்கையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஜூலை 2026, 14:03