பொதுக்காலம் – 16ஆம் ஞாயிறு மறையுரை
உலகம் இறைவனின் வயல்; நாம் நல்ல விதைகள்
கிறிஸ்துவில் அன்பிற்குரியவர்களே,
இன்று நாம் பொதுக்காலத்தின் 16ஆம் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாடுகிறோம். இன்றைய இறைவார்த்தைகள், நாம் இறைவனால் விதைக்கப்பட்ட நல்ல விதைகள் என்றும், இந்த உலகம் இறைவனின் வயல் என்றும் நமக்கு நினைவூட்டுகின்றன. ஒரே உலகத்தைப் பலரும் பலவிதமாகப் பார்க்கிறார்கள். ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர், “உலகமே ஒரு நாடக மேடை” என்று கூறுகிறார். ஒரு போர்வீரனுக்கு உலகம் ஒரு போர்க்களம்; எதிரிகளை வென்று வெற்றிபெற வேண்டிய இடம். ஒரு கவிஞனுக்கு உலகம் இயற்கையின் அழகை ரசிக்கும் அற்புதப் புதையல். ஒரு வணிகருக்கு உலகம் இலாபம் தேடும் சந்தை. ஆனால், இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்குச் சொல்வது வேறு. உலகம் ஒரு வயல்; நாம் அந்த வயலில் விதைக்கப்பட்ட நல்ல விதைகள். அந்த வயலின் உரிமையாளர் இறைவன்; அவர் ஒரு நல்ல விவசாயியைப் போல ஒவ்வொரு விதையையும் அன்போடும் பொறுப்போடும் பராமரிக்கிறார்.
முதல் வாசகமான சாலமோனின் ஞான நூல் (12ஆம் அதிகாரம்), இறைவனின் பண்புகளை அழகாக எடுத்துரைக்கிறது. அவர் நீதியுள்ளவர்; அதே நேரத்தில் இரக்கமுள்ளவர். அவர் அதிகாரமுள்ளவர்; அதே நேரத்தில் பொறுமையுள்ளவர். அவர் மனிதருக்குத் தண்டனை அளிப்பதைவிட மனமாற்றத்திற்கான வாய்ப்பை வழங்குகிறார். ஒரு விதை எந்த வகையைச் சேர்ந்ததோ அதன்படியே வளர்கிறது. ஆனால் மனித வாழ்க்கை அப்படியல்ல. மனிதனுக்கு இறைவன் சுதந்திரத்தை அளித்திருக்கிறார். அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி நாம் நல்ல விதையாகவும் வாழலாம்; களையாகவும் மாறலாம்.
இணைச்சட்டம் 30:15-ல் இறைவன் கூறுகிறார்:
“இதோ, வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று உன் முன் வைத்திருக்கிறேன்.”
எனவே, நன்மையைத் தேர்ந்தெடுப்பதும் தீமையைத் தேர்ந்தெடுப்பதும் நம் சுதந்திரமான முடிவாகும். அப்படியானால், சில நேரங்களில் நாம் ஏன் தீமையைத் தேர்ந்தெடுக்கிறோம்? இதற்குக் காரணம் மனிதனின் பாவத்தால் காயமடைந்த இயல்பு. ஆதாம்–ஏவாள் செய்த முதல் பாவத்தால் மனித இயல்பு பலவீனமடைந்தது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலும் நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தாலும், பாவத்தின் நாட்டம் (Concupiscence) இன்னும் மனிதனுக்குள் செயல்படுகிறது. அது நம்மை சுயநலத்திற்கும் பாவத்திற்கும் இழுக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவது நம் தேர்வு. திருச்சபையின் மறைக்கல்வி (Catechism) இதை தெளிவாக எடுத்துரைக்கிறது. எனவே, இறையருளில் நிலைத்திருந்து, ஆன்மீகப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
புனித பவுல் கூறுகிறார்:
“என் அருள் உனக்குப் போதும்; உன் பலவீனத்தில்தான் என் வல்லமை முழுமையாக வெளிப்படுகிறது.” (2 கொரிந்தியர் 12:9)
இறைவன் நம்மை வீழ்த்துவதற்காக அல்ல, அவருடைய அருளால் நிரப்பி பலன் தரும் வாழ்விற்கு அழைக்கிறார். எனவே, நம் வாழ்க்கையில் உள்ள களைகளை அகற்றி, நல்ல கனிகளைத் தரும் விதைகளாக வளர வேண்டும். இந்த அருள்வாழ்விற்கு ஒரு பரிசும் உண்டு. அறுவடை நாளில், அதாவது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மதிப்பிடப்படும்.
புனித பவுல் கூறுவது போல,
“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. ” (2 திமொத்தேயு 4:7–8)
அன்பானவர்களே, நாமும் இறைவனின் வயலில் விதைக்கப்பட்ட நல்ல விதைகளாக வாழ்வோம். தூய ஆவியானவரின் அருளால் நம் வாழ்க்கையில் உள்ள களைகளை அகற்றி, இறைவனுக்குப் பிரியமான கனிகளைத் தரும் கிறிஸ்தவர்களாக வாழ முயற்சி செய்வோம். இறைவன் நம்மை வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.