ஞாயிறு மறையுரைச் சிந்தனை
அன்பிற்கினிய இறைமக்களே,
மரங்களாகிய நாங்கள் உங்களுக்கு பல சிலுவைகளைத் தந்துவிட்டோம்; ஆனால் மனிதர்களாகிய நீங்கள் ஒரு இயேசுவைக்கூட எங்களுக்குத் தரவில்லை" என்ற சிந்திக்க வைக்கும் வரிகள், சிலுவையின் உண்மையான அர்த்தத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இன்றைய இறைவார்த்தை, நம் வாழ்க்கையின் சுமைகளை எவ்வாறு சுமப்பது என்பதை நமக்குக் கற்றுத் தருகிறது. "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28) என்று ஆண்டவர் இயேசு நம்மை அன்போடு அழைக்கிறார்.
வாழ்க்கையில் பலர் போராட்டங்களோடும், கவலைகளோடும், கண்ணீரோடும் வாழ்கின்றனர். அத்தகைய நேரங்களில், "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" என்று இயேசு கூறுகிறார். ஏன் குழந்தைகளைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார்? ஏனெனில், குழந்தைகள் தங்கள் பெற்றோரையே முழுமையாக நம்பி வாழ்கின்றனர். பெற்றோரைத் தவிர அவர்களுக்கு வேறு ஆதாரம் இல்லை. அதுபோலவே, நாமும் முழுமையான நம்பிக்கையோடு இறைவனைச் சார்ந்து வாழ வேண்டும். "என் கண்ணீரையும், என் துன்பங்களையும், என் கவலைகளையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டால், அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்" என்ற ஆழமான விசுவாசம் நம்மில் இருக்க வேண்டும்.
"என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்ற ஆண்டவரின் வார்த்தை நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. உலகத்தில் பலர் நம்மைத் துன்பப்படுத்தலாம். ஆனால், "நான் உன்னோடு இருக்கிறேன்; உன் துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்று உறுதியளிப்பவர் ஆண்டவர் மட்டுமே. அவரை நம்பி அவரோடு இணைந்து வாழும்போது, எந்தத் துன்பத்தையும் வெல்லும் வலிமையை நாம் பெறுகிறோம். ஆண்டவர் மேலும் கூறுகிறார்: "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்." நுகம் என்பது சுமையின் அடையாளம். பொதுவாக, எந்தச் சுமையையும் சுமப்பது எளிதல்ல. ஆனால், நாம் சுமக்கும் வாழ்க்கைச் சுமைகளை ஆண்டவரும் நம்மோடு சேர்ந்து சுமக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால் அந்தச் சுமைகள் நமக்கு தாங்க முடியாத பாரமாக இருக்காது.
நமது பாரங்களை மனிதர்களிடம் இறக்கிவைக்க முயல்கிறோம். ஆனால் எல்லோராலும் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. நமது பாரங்களை ஆண்டவரிடம் ஒப்படைத்துப் பாருங்கள். அவர் அவற்றை ஆசீர்வாதங்களாக மாற்றுவார். இன்று பலருக்கு குடும்பமே ஒரு சுமையாகத் தெரிகிறது. பிள்ளைகள் சுமையாகத் தோன்றுகிறார்கள். வேலை சுமையாகிறது. வாழ்க்கையே சுமையாக மாறிவிடுகிறது. "சுமை... சுமை..." என்று எண்ணி நாம் பல நேரங்களில் சோர்ந்து போகிறோம். ஆனால் ஆண்டவர் நமக்கு சுமக்கக் கற்றுத் தருகிறார். அவர் தமது வாழ்விலேயே சிலுவையைச் சுமந்தார். அவமதிப்புகளையும், இகழ்ச்சிகளையும், அடிகளையும், வேதனைகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். மக்களுக்காக அற்புதங்கள் செய்தபோதும், அவரைக் குறை கூறியவர்களையும் அன்போடு மன்னித்தார். தனது வாழ்வின் மூலம் துன்பத்தை எவ்வாறு சுமப்பது என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்தார்.
எனவே, நமது சுமைகளை ஆண்டவரிடம் ஒப்படைப்போம். அவரோடு இணைந்து நடந்தால், நமது பாரங்கள் ஆசீர்வாதங்களாக மாறும். இறைவன் நமக்கு சுமைகளை மட்டும் தருவதில்லை; அவற்றைச் சுமப்பதற்கான வலிமையையும் அருள்கிறார். ஆண்டவர்மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவர் நமது குடும்பச் சுமைகளை, கவலைகளை, நோய்களை, கண்ணீர்களைத் தாங்கிக்கொண்டு, நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார்.
ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.