தேடுதல்

பொதுக்காலம் – 17ஆம் ஞாயிறு பொதுக்காலம் – 17ஆம் ஞாயிறு 

பொதுக்காலம் – 17ஆம் ஞாயிறு மறையுரை

அழிந்துபோகும் உலகச் செல்வங்களை விட, இறைவனின் 'ஞானம்' என்னும் நிலையான புதையலைத் தேடி ஓடுவதே உண்மையான சீடத்துவத்தின் அடையாளம்!

அருட்பணி. ஜா. பாஸ்டின் பாரதி

ஆண்டவர் இயேசுவின் பிரியமுள்ள சகோதரர் சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.

ஒரு நகரத்தில் பழைய, பயன்படுத்தப்படாத பொருட்களை வாங்கி விற்கும் ஒரு ஏலக்கடை இருந்தது. ஒருநாள், பழைய ஒரு வயலின் அந்தக் கடைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது. பல நாட்கள் கடந்தும் யாரும் அதை வாங்கவில்லை. பின்னர் அதை கடையின் ஒரு மூலையில் தூசி படிந்து கிடக்க வைத்துவிட்டனர். அந்தக் கடைக்கு அடிக்கடி வரும் ஒருவர், அந்த வயலினை கவனித்தார். அதை எடுத்துத் தூசியைத் துடைத்து, அதன் நரம்புகளைச் சரிசெய்து மெதுவாக வாசிக்கத் தொடங்கினார். இனிமையான இசை அந்த வயலினிலிருந்து வெளிப்பட்டது. அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். "இவ்வளவு அழகான இசையைத் தரும் வயலின் இவ்வளவு நாளாக யாருடைய கவனத்திற்கும் வரவில்லையா?" என்று வியந்தனர். உடனே பலர் அதை வாங்க முன்வந்தனர். அதன் விலையும் பல மடங்கு உயர்ந்தது. அன்பிற்குரியவர்களே, இந்த நிகழ்வு நம் வாழ்க்கையின் ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது. பல நேரங்களில் நமக்குக் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷங்களை நாம் உணராமல் கடந்து செல்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மூன்று உவமைகளைச் சொல்கிறார்.

முதலாவது, வயலில் மறைந்திருந்த புதையலைக் கண்ட மனிதரைப் பற்றியது. அந்தப் புதையலைக் கண்டவுடன், அதை மீண்டும் மூடிவைத்து, தன்னிடம் இருந்த அனைத்தையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக் கொள்கிறான்.

அடுத்ததாக, விலையுயர்ந்த முத்தைக் கண்ட வணிகரைப் பற்றியும் கூறுகிறார். அவனும் தன்னிடமிருந்த அனைத்தையும் விற்று அந்த ஒரே முத்தை வாங்குகிறான்.

இந்த இரண்டு உவமைகளும் ஒரு பெரிய உண்மையை நமக்கு எடுத்துரைக்கின்றன. இறையாட்சி என்பது எல்லாவற்றையும் விட மேலான பொக்கிஷம். அதை உணர்ந்தவர் வேறு எதையும் பற்றிக் கொள்ள மாட்டார்.

நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட புதையல்கள் இருக்கின்றன.

ஒருவரை மன்னிப்பது, தவறான வாழ்க்கையிலிருந்து மனந்திரும்புவது, பாவசங்கீர்த்தனம் செய்வது, இறைவனிடம் திரும்பி வருவது—இவை அனைத்தும் இறைவன் நமக்குத் தரும் அரிய பொக்கிஷங்கள். ஆனால் பல நேரங்களில் அவற்றின் மதிப்பை நாம் உணராமல் கடந்து செல்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் ஒரு கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

"இறைவனுக்காக நான் எதை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்?"

இன்றைய நற்செய்தியில் வரும் இருவரும், தாங்கள் விட்டவற்றை நினைத்து வருந்தவில்லை. மாறாக, உயர்ந்த பொக்கிஷத்தைக் கண்ட மகிழ்ச்சியில் அனைத்தையும் விட்டார்கள். அன்புடையவர்களே, முதல் வாசகத்தில் சாலமோன் அரசர் இறைவனிடம் செல்வத்தையோ, நீண்ட ஆயுளையோ, எதிரிகளின் அழிவையோ கேட்கவில்லை. மாறாக, மக்களை நீதியுடன் ஆளுவதற்கான ஞானத்தையே கேட்டார்.

"நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவுள்ள இதயத்தை எனக்குத் தாரும்" என்று இறைவனிடம் வேண்டினார். இந்த வேண்டுதல் ஆண்டவருக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. எனவே, இறைவன் ஞானத்துடன் சேர்த்து அவர் கேட்காத பல ஆசீர்வாதங்களையும் அளித்தார்.

அன்பானவர்களே, நாமும் உலகச் செல்வங்களை விட இறைவனின் ஞானத்தையும், இறையாட்சியையும் முதன்மைப்படுத்த அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தியின் மூன்றாவது உவமை மீன்பிடி வலையைப் பற்றியது. கடலில் வீசப்பட்ட வலை எல்லா வகையான மீன்களையும் பிடிக்கிறது. பின்னர் நல்ல மீன்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன; பயனற்றவை வெளியே எறியப்படுகின்றன. அதுபோல உலக முடிவிலும் நடக்கும். நல்லவர்களும் தீயவர்களும் பிரித்தறியப்படுவார்கள்.

எனவே, ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையை ஆய்வு செய்வோம். நாம் இறையாட்சி என்னும் புதையலை உணர்ந்தவர்களாக வாழ்கிறோமா? இறைவனுடைய ஞானத்தைத் தேடுகிறோமா? நிலைவாழ்வை நோக்கி நம்மை வழிநடத்தும் வாழ்க்கையை வாழ்கிறோமா? இந்த இறைவார்த்தை நம்மை உண்மையான பொக்கிஷத்தைத் தேடும் மக்களாகவும், இறையாட்சியை முதன்மைப்படுத்தும் சீடர்களாகவும் மாற்ற இறைவன் அருள் புரிவாராக.

ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூலை 2026, 14:52