தேடுதல்

புனித மோனிகா – இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு கருணையின் இல்லம். புனித மோனிகா – இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு கருணையின் இல்லம்.  (Santa Mónica )

போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையூட்டும் புனித மோனிகா அறக்கட்டளை!

அர்ஜென்டினாவின் ரியோ கிராண்டே நகரில், தாய்மார்களின் சிறிய இறைவேண்டல் குழுவாகத் தொடங்கிய புனித மோனிகா அறக்கட்டளை, இன்று போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆன்மிக, உளவியல் மற்றும் சமூக ஆதரவை வழங்கும் நம்பிக்கையின் மையமாக விளங்கி வருகிறது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட தாய்மார்களின் சிறிய இறைவேண்டல் குழுவாகத் தொடங்கிய முயற்சி, இன்று அர்ஜென்டினாவின் டியர்ரா டெல் ஃபியூகோ மாகாணத்தில் உள்ள ரியோ கிராண்டே நகரில், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் துணைநிற்கும் ' புனித மோனிகா' அறக்கட்டளையாக வளர்ந்து, பலரது வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றிவருகிறது.

இந்த பிறரன்புப் பணி, 2012ஆம் ஆண்டில் சலேசிய சபை அருள்பணியாளர் பெலிசிசிமோ விசென்டே அவர்களின் அழைப்பின் பேரில், அருள்சகோதரி விர்ஜீனியா மைக்கேல் மற்றும் அருள்சகோதரி ரோசியோ பர்மிஜியானி ஆகியோர் தலைமையிலான இயேசுவின் சீடர் சகோதரிகளால் (Sisters Disciples of Jesus) தொடங்கப்பட்டது.

இறைஇரக்க இயேசுவின் மேய்ப்புப் பணி மையம் (Jesús de la Divina Misericordia Pastoral Centre) வழியாகப் பணியாற்றிய அவர்கள், கடுமையான தட்பவெப்ப நிலையும் புவியியல் தனிமையும் காரணமாக அப்பகுதியில் அதிகரித்திருந்த தனிமை, மனச்சோர்வு மற்றும் போதைப் பழக்கம் போன்ற சமூகச் சவால்களை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையையும் புதிய வாழ்வையும் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் தாய்மார்களுக்கு ஆன்மீக ஆதரவை வழங்கிய சகோதரிகள், இறைவேண்டல் மட்டுமே போதாது என்பதை விரைவில் உணர்ந்தனர். தன்னார்வலர்களின் உதவியுடன், இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆன்மீக மற்றும் சிகிச்சை ரீதியான கவனிப்பை வழங்கும் இலவசத் திட்டம் ஒன்றை அவர்கள் உருவாக்கினர். தற்போது அப்பகுதியில் இத்தகைய சேவையை வழங்கும் ஒரே அமைப்பாக இந்த சகோதரிகள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

தன் மகன் புனித அகுஸ்தினாரின் மனமாற்றத்திற்காக இடைவிடாது இறைவேண்டல் செய்த புனித மோனிகாவின் பெயரையே இந்த அறக்கட்டளை தாங்கியுள்ளது. அவரது விடாமுயற்சியுடனான செப வாழ்வு, நம்பிக்கையின் வலிமையையும், குணமடைதல் மற்றும் மறுவாழ்வின் பயணத்தில் தாய்மார்களின் இன்றியமையாத பங்கையும் எடுத்துக்காட்டுவதாக இவ்வறக்கட்டளை வலியுறுத்துகிறது.

இதற்கு ஒரு ஆற்றல் மிக்க சான்றாக மாரிசெல்லின் வாழ்க்கை உள்ளது. குழந்தைப் பருவத்தில் கைவிடப்பட்டு போதைப் பழக்கத்திற்கு ஆளான அவர், தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் மனநிலையில் புனித மோனிகா அறக்கட்டளைக்கு வந்து சேர்ந்தார். பொறுமையான வழிகாட்டுதல், தொழில்முறை சிகிச்சை மற்றும் ஆன்மீகப் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் அவர் குணமடைந்து, மீண்டும் தன் குழந்தைகளின் பாதுகாப்பைப் பெற்றுத் தன் வாழ்க்கையை மறுபடியும் கட்டி எழுப்பியுள்ளார்.

இன்று, உதவியை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் புனித மோனிகா அறக்கட்டளை வழங்கும் நம்பிக்கையின் உறுதியான செய்தி: "நீங்கள் இனித் தனியாக இல்லை" என்பதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 14:03