தேடுதல்

பப்புவா நியூ கினியாவில் மூத்த மறைப்பணியாளர்கள் பப்புவா நியூ கினியாவில் மூத்த மறைப்பணியாளர்கள்  (©Photo by Fr. Christian Sieland)

பப்புவா நியூ கினியா திருஅவைக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஓய்வுபெற்ற மறைப்பணியாளர்கள்

பப்புவா நியூ கினியாவில் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஓய்வுபெற்ற மறைப்பணியாளர்கள், தங்கள் சேவையை வாழ்வின் மிகப் பெரிய அருளாகக் கருதுகின்றனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பப்புவா நியூ கினியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பல மறைப்பணியாளர்கள், வயது மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வு பெற்று ஐரோப்பாவிற்குத் திரும்பியிருந்தாலும், அவர்களின் மறைபரப்பு ஆர்வம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

அவர்களில் பலர் தாங்கள் நேசித்துப் பணியாற்றிய அந்த நாட்டிலேயே தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தைக் கழிக்க விரும்புகின்றனர்.

ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் உள்ள ஓய்வுபெற்ற 'இறை வார்த்தை சபை' (SVD) மற்றும் 'தூய ஆவியின் மறைபரப்பு ஊழியர்  சகோதரிகள்' (SSpS) ஆகியோரை பப்புவா நியூ கினியாவில் உள்ள திருத்தந்தை மறைத்தூதுக் கழகத்தின் தேசிய இயக்குனர் அருள்பணி கிறிஸ்டியன் சீலாண்ட் அவர்கள் அண்மையில் சந்தித்துள்ளார்.‌ அவர்களில், பப்புவா நியூ கினியாவின் திருஅவைக்கு ஏறத்தாழ 60 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆயர் ஹெங்க் தே மார்சென் (SVD) அவர்களும் ஒருவர். அப்போது அங்குள்ள எவரும் தாங்கள் மறைபரப்பாளர்களாக மாறியதற்காக வருத்தப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளார்.

"அந்த சந்திப்பின் போது மறைப்பணியாளர்கள் தாங்கள் சந்தித்த சிரமங்களை விட மக்களுக்குச் சேவை செய்த மகிழ்ச்சியான தருணங்களையே நினைவு கூர்ந்தனர்" என்றும் "நற்செய்தி அறிவிப்புப் பணியோடு நில்லாமல், அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், பங்குகள் மற்றும் சமூக நிறுவனங்களை நிறுவ உதவியதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்" என்றும் அருள்பணி கிறிஸ்டியன் சீலாண்ட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களது பணியின் மூலம் பெற்ற புகழனைத்தையும் கடவுளுக்கே அர்ப்பணித்து, மிகுந்த தாழ்மையுடன் தங்களது பணியை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த மறைப்பணியாளர்கள் அங்குள்ள உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொள்வது, பாரம்பரியங்களை மதிப்பது மற்றும் நற்செய்தியைப் பிரதிபலிக்கும் விழுமியங்களை அடையாளம் காண்பது ஆகியவற்றின் மூலம் அவர்கள் உள்ளூர் கலாச்சாரங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். சிலர் உள்ளூர் மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் அகராதிகள் மற்றும் இலக்கண வழிகாட்டிகளையும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இன்றைய மறைப்பணியாளர்கள் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் திறந்த மனதுடனும், மரியாதையுடனும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும் அணுக வேண்டும்"  என்று அருள்பணி சீலாண்ட் அவர்கள் ஊக்குவித்தார்.

மேலும் "உண்மையான நற்செய்தி அறிவிப்பு என்பது, மக்களிடையே ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடவுளின் பிரசன்னத்தை அங்கீகரிப்பதில் இருந்தே தொடங்குகிறது" என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஓய்வுபெற்ற மறைப்பணியாளர்களின் வாழ்க்கை, எளிமையான சேவை, பண்பாட்டுமயமாக்கல், நிலையான அன்பு மற்றும் நற்செய்தியின் மீதான நம்பிக்கையுள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு இன்றும் ஒரு ஆற்றல்மிக்க சான்றாகக் திகழ்கிறது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூலை 2026, 12:46