குழந்தைகளைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பேராயர்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் குறித்து இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி மறைமாவட்டத்தின் பேராயர் ஜோசப் அர்ஷாத் அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
"குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது" என்று வலியுறுத்திய பேராயர் அர்ஷாத் அவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த 'சாஹில்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையான Cruel Numbers அதாவது "களங்கமான புள்ளிவிவரங்கள்" என்பதையும் மேற்கோள்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, 3,630 குழந்தை வன்முறை வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 8 விழுக்காடு அதிகமாகும். சராசரியாக, ஒவ்வொரு நாளும் ஒன்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். கடத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவையே மிகவும் பொதுவான குற்றங்களாக அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 53 விழுக்காடு பேர் சிறுமிகள் என்றும், 11 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மனித மாண்புக்கு எதிரான மிகக் கொடூரமான மீறல்களில் ஒன்றாகும். என்று விவரித்துள்ள பேராயர் அர்ஷாத் அவர்கள், "குழந்தைகள் அச்சத்துடன் வாழும் எந்தவொரு சமூகமும், தாம் நீதியான சமூகம் என்றோ அல்லது அமைதியான சமூகம் என்றோ உரிமை கோர முடியாது" என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும் "குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் குழந்தை பாதுகாப்பு நிறுவனங்கள் விரைவான, வெளிப்படையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும், "தாமதமின்றி நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக, இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி கத்தோலிக்க சமூகம் 2026 ஆம் ஆண்டை "குழந்தைகளின் ஆண்டு" என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் மாண்பு, பாதுகாப்பு, கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான திருஅவையின் அர்ப்பணிப்பை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேராயர் மேலும் கூறுகையில், "பெற்றோர், ஆசிரியர்கள், சமயத் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் குடிமைச் சமூகம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்" என்றும், " வரம்பு மீறல் என சந்தேகிக்கப்படும் நிகழ்வுகளைப் பற்றி புகாரளிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
"வரம்பு மீறல்கள் நிகழும் போது மௌனத்தையும் களங்கம் ஏற்படுமோ என்ற ஐயத்தையும் புறந்தள்ளி, ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு, மாண்பு மற்றும் நம்பிக்கையுடன் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.