"நமது வேர்கள்": சமூக மாற்றத்தைப் பதிவு செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆயர் பேரவை (CELAM), இலத்தீன் அமெரிக்காவிற்கான பாப்பிறை ஆணையம் (PCAL), ஃபே இ விடா நிறுவனம் (Fe y Vida Institute), இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (ODUCAL), மற்றும் நமது பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கான பல்கலைக்கழகக் கூட்டமைப்பு (RUC) ஆகியவை இணைந்து, "நமது வேர்கள்" (Nuestras Raíces) என்ற கண்டம் தழுவிய புதிய முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளன.
தங்கள் சமூகங்களை மாற்றியமைத்த கதைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு இளைஞர்களை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, பல்கலைக்கழகங்கள், பங்குகள், இயக்கங்கள், அமைப்புகள் அல்லது உள்ளூர் சமூகங்களில் தீவிரமாகச் செயல்படும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களைப் பங்கேற்க அழைக்கிறது.
இதில் பங்கேற்கும் இளைஞர்கள் தங்களது அனுபவங்களை இசை, கதைசொல்லல், காட்சிப் பொதுக்கலைகள், புகைப்படம் எடுத்தல், ஊடகங்கள் மற்றும் பிற ஆக்கப்பூர்வமான வடிவங்கள் மூலம் வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்.
இக்கதைகள், ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிகள், மேய்ப்புப்பணித் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் அல்லது நம்பிக்கை, சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பை வளர்த்தெடுக்கும் பிற செயல்பாடுகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"படைப்புகளை ஜூலை 8 முதல் செப்டம்பர் 30, 2026 வரை சமர்ப்பிக்கலாம்" எனவும் "தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் ஒரு எண்ணிம கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்படும்" எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்கள் நவம்பர் 2026 முதல் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் தொடங்கும் மாநிலக் கூட்டங்களில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
திருஅவையின் சமூகக் கோட்பாட்டினால் ஈர்க்கப்பட்ட "நமது வேர்கள்" என்கிற முயற்சி, இளைஞர்களுக்கு ஒரு சிறந்த தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் கண்டம் முழுவதும் நம்பிக்கை, உரையாடல், அமைதி மற்றும் ஒருவரையொருவர் சந்திக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் உள்ளூர் கதைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.