தேடுதல்

2026.07.08 church

போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரின் கலே மறைமாவட்டத்தில் உதயமான புதிய பங்கு

மியான்மரின் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கலே மறைமாவட்டத்தில், புனித பேட்ரிக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பங்குத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. 210 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட ஆறு கிராமங்களுக்கு ஆன்மிகச் சேவையாற்றவுள்ள இந்தப் பங்கு, போர் மற்றும் இடப்பெயர்வுகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை, உறுதி மற்றும் திருஅவையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மியான்மரில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியிலும், கத்தோலிக்கத் திருஅவை, வடமேற்கு மியான்மரில் உள்ள கலே மறைமாவட்டத்திற்கு உள்பட்ட 'கைகாம் மியோ'  என்ற இடத்தில் புனித பேட்ரிக்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பங்குத் தளத்தைத் தொடங்கியுள்ளது. ஆயர் பெலிக்ஸ் லியான் கென் தாங் தலைமையில் இடம்பெற்ற தொடக்க விழா திருப்பலியில் 12 அருள்பணியாளர்களும் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த பலர் உள்பட 600-க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்தத் திருப்பலியின் போது,  60 இளைஞர்களுக்கு உறுதிபூசுதல் அருள்சாதனத்தை வழங்கிய ஆயர் அவர்கள், இந்தப் புதிய பங்கு மறைமாவட்டத்திற்கு "கடவுளிடமிருந்து கிடைத்த ஆசி மற்றும் ஒரு நம்பிக்கையின் அடையாளம்" என்றும் விவரித்தார்.

முதல் பங்குத்தந்தையாக அருள்பணி சில்வெஸ்டர் பாவ் வான் சாங் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள இப்பங்கு, 210 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட ஆறு கிராமங்களுக்கு சேவை வழங்கவுள்ளது. இதன்மூலம், அங்குள்ள இறைமக்கள் திருப்பலி, அருள்சாதனங்கள் மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் ஆன்மிகப் பராமரிப்பை எளிதாகப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏறத்தாழ 60,000 கத்தோலிக்கர்களைக் கொண்ட கலே மறைமாவட்டம், மியான்மரில் இடம்பெற்ற 2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், பல ஆலயங்களும் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இடம்பெயர்ந்த ஏறத்தாழ 40,000 மக்களுக்குத் தஞ்சம் அளித்து வரும் இந்த மறைமாவட்டம் தற்போது ஆலய வளாகங்களை அவசரகால நிவாரண மையங்களாகவும் மாற்றியுள்ளது.

மோதல்கள், இடப்பெயர்வுகள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியிலும், இந்தப் புதிய பங்கின் தொடக்க விழா நம்பிக்கை, மீள்தன்மை மற்றும் எதிர்நோக்கின் ஆற்றல் மிக்க அடையாளமாகத் திகழ்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூலை 2026, 12:50