தேடுதல்

நேர்காணல் நேர்காணல்  

நேர்காணல் – திருத்தூது பணியாற்றும் பாலர் சபை

இன்றைய குழந்தைகளே நாளைய நற்செய்தியாளர்கள்; அவர்களின் இறைநம்பிக்கையை வளர்ப்பதே திருஅவையின் முதன்மை நோக்கம்.

சகோதரி பிரைடா:

இனிய இதயங்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

நான் உங்கள் சகோதரி பிரைடா. கடந்த நிகழ்ச்சிகளில், திருத்தூது பணியாற்றும் பாலர் சபை குறித்து பல்வேறு தகவல்களை அருள்தந்தை இருதயராஜ் அவர்களிடமிருந்து அறிந்து கொண்டோம். அந்தப் பாலர் சபையின் நோக்கம், இலக்கு, செயல்பாடுகள் மற்றும் திருஅவையின் மறைப்பணியில் அதன் பங்களிப்பு குறித்து அவர் சிறப்பாகப் பகிர்ந்து கொண்டார்.

இன்றும் மேலும் சில முக்கியமான கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள அருள்தந்தை அவர்கள் நம்மிடையே வந்திருக்கிறார். அவரை அன்புடன் வரவேற்கிறோம்.

வணக்கம், தந்தையே!

மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை, பாலர் சபையின் பணிகள், அதன் இலக்குகள், குழந்தைகளை மறைப்பணியில் ஈடுபடுத்தும் விதம் போன்ற பல்வேறு அம்சங்களைப் பகிர்ந்து கொண்டீர்கள்.

இப்போது நான் உங்களிடம் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால்...

2033ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மீட்புப் பெருவிழா (Great Jubilee) நோக்கி, இந்த திருத்தூது பணியாற்றும் பாலர் சபையின் பணிகள் இன்னும் சிறப்பாக அமைய என்னென்ன திட்டங்களை நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்? குழந்தைகளுக்காக நீங்கள் வகுத்துள்ள முக்கிய குறிக்கோள்கள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அருள்தந்தை இருதயராஜ்:

மிக்க நன்றி, சகோதரி.

எனக்கு மிகவும் நெருக்கமானதும் மனதிற்கு மிகவும் பிடித்ததுமான பணி திருத்தூது பணியாற்றும் பாலர் சபை தான். குழந்தைகளின் உள்ளத்தில் நற்செய்திப் பணிக்கான ஆர்வத்தை வளர்ப்பதே எங்களுடைய முதல் நோக்கம். அதற்காக பல்வேறு படைப்பாற்றல் மிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள், பாடல்கள், கதைப்போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றின் வழியாக, குழந்தைகள் திருத்தூது பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும், "சிறுவர் பாராளுமன்றம்" போன்ற அமைப்புகளை உருவாக்கி, பாலர் சபையின் சில செயல்பாடுகளை குழந்தைகளே திட்டமிட்டு நடத்தும் வாய்ப்பை வழங்க முயற்சி செய்து வருகிறோம்.

இன்றைய குழந்தைகள் கணினி, இணையம், டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபாரமான திறமைகளைக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் திறமைகளை அடையாளம் கண்டு, நற்செய்திப் பணிக்காகவும், திருத்தூது பணிக்காகவும் பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாகும்.

என்னுடைய பணிவாழ்வில் குழந்தைகள்தான் எனக்கு அதிகமான ஊக்கத்தை அளித்தவர்கள். அதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பகிர்தல், சேமித்தல் மற்றும் பொறுப்புடன் செலவிடுதல் ஆகிய நல்ல பழக்கங்களை உருவாக்க வேண்டும்.

அதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று உண்டியல்கள் வழங்கலாம்.

  • முதல் உண்டியல் – உதவி செய்வதற்காக. ஏழைகள், முதியவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு உதவுவதற்காக.
  • இரண்டாவது உண்டியல் – செலவு செய்வதற்காக. தேவையான பொருட்களை பொறுப்புடன் வாங்கும் பழக்கத்தை வளர்க்க.
  • மூன்றாவது உண்டியல் – சேமிப்பதற்காக. எதிர்காலத்திற்காக சேமிக்கும் ஒழுக்கத்தை உருவாக்க.

இதேபோல், ஆன்மீக வாழ்விற்கும் குழந்தைகள் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் இறைநம்பிக்கையில் வளர தனிப்பட்ட அக்கறை செலுத்த வேண்டும்.

எனவே, பங்குகளிலும் கல்வி நிறுவனங்களிலும் சில முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • குழந்தைகளுக்கான திருத்தூது பணி ஊர்வலங்களை நடத்தலாம்.
  • பதாகைகள், வாசகங்கள், கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
  • திருத்தூது பணியை மையமாகக் கொண்டு ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்தலாம்.
  • குழந்தைகளின் திறமைகளை நற்செய்திப் பணிக்காக பயன்படுத்த வழிகாட்டலாம்.
  • ஜெபச் சங்கிலிகளை உருவாக்கி, பங்குகள் ஒன்றோடொன்று இணைந்து செபிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற படைப்பாற்றல் மிக்க முயற்சிகள் மூலம் மேலும் பல குழந்தைகள் திருத்தூது பணியில் இணைவார்கள்.

இன்றைய குழந்தைகளே நாளைய சிறந்த நற்செய்தியாளர்கள். அவர்கள் எதிர்காலத்தில் திருஅவையின் வலிமையான தூண்களாக விளங்குவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நன்றி.

சகோதரி பிரைடா:

மிக்க நன்றி, தந்தையே. 2033ஆம் ஆண்டு மீட்புப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தூது பணியாற்றும் பாலர் சபைக்காக நீங்கள் பகிர்ந்துகொண்ட இலக்குகள், திட்டங்கள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாகவும் ஊக்கமளிப்பவையாகவும் இருந்தன. உங்கள் பணிக்கும், குழந்தைகள் வழியாக திருஅவையின் எதிர்காலத்தை உருவாக்கும் உங்கள் அர்ப்பணிப்புக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

24 ஜூலை 2026, 14:00