நேர்காணல் நேர்காணல்  

நேர்காணல்

திருத்தூதர் பணியாற்றும் பாலர் சபை, குழந்தைகளிடம் இறையன்பு, இறைவார்த்தை மீதான ஈடுபாடு மற்றும் ஏழை எளியோருக்குச் சேவை செய்யும் மனப்பான்மையை வளர்க்கிறது. சிறுவயதிலிருந்தே பகிர்ந்து கொடுக்கும் பண்பையும், சமூக அக்கறையையும் உருவாக்குவதன் மூலம் குழந்தைகள் உண்மையான திருத்தூதர்களாக உருவாக்கப்படுகிறார்கள். இத்தகைய பணியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அருள்தந்தையர்கள் மற்றும் அருள்சகோதரிகள் இணைந்து குழந்தைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

சகோதரி பிரைடா

இனிய இதயங்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

நான் உங்கள் அருட்சகோதரி பிரைடா.கடந்த நிகழ்ச்சிகளில், திருத்தூதர் பணியாற்றும் பாலர் சபை குறித்து பல்வேறு தகவல்களை அருள்தந்தை இருதயராஜ் அவர்களிடமிருந்து அறிந்து கொண்டு வருகிறோம்.

இன்றும் அதே தொடர்ச்சியில், இன்னும் பல அருமையான கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள அருள்தந்தை அவர்கள் நம்மிடையே வந்திருக்கிறார். அவரை அன்புடன் வரவேற்போம்.

வணக்கம், ஃபாதர்! மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த நிகழ்ச்சியில், குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற மனம் குறித்து அழகாகப் பகிர்ந்தீர்கள். இன்று நான் கேட்க விரும்புவது, திருத்தூதர் பணியாற்றும் பாலர் சபையின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் எப்படி இருக்கின்றன? எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதற்கு ஒரு நோக்கம், ஒரு செயல்திட்டம், ஒரு இயக்கம் இருக்கும். அதுபோல இந்த பாலர் சபையின் இயக்கம் பற்றி எங்களுக்குச் சிறிது விளக்கமாகக் கூறுங்கள்.

அருள்தந்தை இருதயராஜ்:

குழந்தைகளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். குழந்தைகளோடு இருக்கும்போது நாமும் குழந்தைகளாகவே மாறிவிடுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வைப் பகிர விரும்புகிறேன். அப்போது ஒரு குடும்பத்தில் ஆறு வயது மற்றும் நான்கு வயது கொண்ட இரண்டு சிறுமிகள் இருந்தார்கள். அவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர்.

நான் தற்போது ஆரோக்கிய அன்னை பெற்றோர் இல்லத்தில் பணியாற்றி வருகிறேன். சமூகத்தில் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, ஏழ்மையில் வாழும் முதியோர்களை முழுமையாக இலவசமாக பராமரித்து அவர்களோடு வாழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இது இறைவன் தந்த மிகப்பெரிய அருளாக நான் கருதுகிறேன். அந்த இரண்டு சிறுமிகளும் தாத்தா, பாட்டிகளுக்காக ஒரு பரிசுப் பொருளை கொண்டு வந்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.1,800. அந்த வயதில் இருக்கும் குழந்தைகள் இவ்வளவு அன்போடு பிறரை நினைப்பது என்னை மிகவும் நெகிழச் செய்தது.

பிறகு அவர்களிடம் கேட்டபோது, பல மாதங்களாக அவர்களுக்குக் கிடைத்த சிறுசிறு பரிசுத் தொகைகளையும், பணத்தையும் செலவு செய்யாமல் சேமித்து வைத்திருந்ததாகக் கூறினார்கள். "இதை ஏழை தாத்தா, பாட்டிகளுக்கு உதவியாக கொடுக்க வேண்டும்" என்ற எண்ணம் அவர்களுக்குள் இருந்தது. இதுதான் திருத்தூதர் பணியாற்றும் பாலர் சபையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

முதலில், குழந்தைகளுக்கு இறைவன்மீது ஆழமான அன்பும் ஆர்வமும் வளர வேண்டும். இரண்டாவதாக, அவர்கள் இறைவார்த்தையை வாசித்து, அதன் வழியாக இறைவன் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை உணர வேண்டும். மூன்றாவதாக, தங்களைச் சுற்றியுள்ள ஏழைகள், துன்பப்படுபவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்று இலக்குகளே திருத்தூதர் பணியாற்றும் பாலர் சபையின் அடிப்படை நோக்கங்களாகும்.

சகோதரி பிரைடா

மிக்க நன்றி, ஃபாதர்.

உங்கள் அனுபவம் உண்மையிலேயே மனதைத் தொட்டது. ஆறு வயது, நான்கு வயது குழந்தைகள் தங்களுக்குக் கிடைத்த பணத்தை உடனே செலவழிக்காமல், பல மாதங்கள் சேமித்து வைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. அந்தக் குழந்தைகளைப் பாராட்ட வேண்டும். அதைவிட, அவர்களுக்குள் இந்த நல்ல மனப்பான்மையை விதைத்த பெற்றோர்களை நாம் மனதாரப் பாராட்ட வேண்டும். இந்த அழகான அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

அருள்தந்தை இருதயராஜ்:

நான் பணியாற்றும் பகுதிகளில் பல அருள்சகோதரிகள் நடத்தும் முதியோர் இல்லங்களும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களும் உள்ளன. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில், பாலர் சபை குழந்தைகள் அங்கு சென்று சோப்பு, பற்பசை, பற்பரிசு, துணிகள் போன்ற அன்றாடத் தேவையான பொருட்களை வழங்குகிறார்கள். இவ்வாறு சிறு வயதிலேயே பகிர்ந்து கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, பள்ளிகளில் பணியாற்றும் அருள்சகோதரிகளும், அருள்தந்தையர்களும் இந்த பாலர் சபையை சிறப்பாக வழிநடத்த வேண்டும். குழந்தைகளுக்கு திருத்தூதுப் பணியின் அனுபவத்தை வழங்க வேண்டும். நானும் பள்ளிகளில் பணியாற்றியபோது, குழந்தைகளை அன்னை தெரேசா இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வோம். அவர்கள் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தபோது, பிறர்மீது அக்கறை கொண்ட மனப்பான்மை இயல்பாகவே வளர்ந்தது.கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களில் வெறும் கொண்டாட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், தேவையுள்ளவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வாகும்.

சகோதரி பிரைடா

மிக்க நன்றி, ஃபாதர்.

இனிய இதயங்களே, இன்று அருள்தந்தை இருதயராஜ் அவர்கள், திருத்தூதர் பணியாற்றும் பாலர் சபையின் இயக்கம், அதன் நோக்கம் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் அது ஏற்படுத்தும் நல்ல மாற்றங்கள் குறித்து மிகவும் அழகாகப் பகிர்ந்து கொண்டார். அடுத்த நிகழ்ச்சியிலும் இதே தொடரில் இன்னும் பல பயனுள்ள கருத்துகளை அவரிடமிருந்து கேட்டு அறிந்துகொள்வோம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது,

உங்கள் சகோதரி பிரைடா

நன்றி. இறைவன் உங்களை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஜூலை 2026, 13:03