ஆயர் ஒசோரியோ கொலை: திருத்தந்தையின் ஆதரவுக்கு மொசாம்பிக் ஆயர்கள் நன்றி!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
மொசாம்பிக் நாட்டின் ஆயர் ஒசோரியோ கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வெளிப்படுத்திய நெருக்கத்திற்கும் ஒற்றுமைக்கும், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். உரோமையில் நடைபெற்ற சந்திப்பின்போது, மொசாம்பிக்கின் தற்போதைய சூழலை திருத்தந்தை ஆழமாகப் புரிந்துகொண்டதை அவர்கள் பாராட்டினர்.
ஜூன் 6ஆம் நாள் நடைபெற்ற ஆயர் ஒசோரியோவின் கொலை குறித்து இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்று மொசாம்பிக் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் இனாசியோ சாவ்ரே அவர்கள் தெரிவித்தார். உயர்தர துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது மட்டுமே உறுதியாகத் தெரிந்துள்ளதாகவும், விசாரணை தேசிய குற்றப்புலனாய்வு சேவை (SERNIC) வசம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கொலையை திருஅவைக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளுடன் தொடர்புபடுத்தி ஆதாரமின்றி வெளியாகும் ஊடக ஊகங்களை ஆயர்கள் எச்சரிக்கையுடன் நிராகரித்தனர். அதேவேளையில், திருப்பணியில் நேர்மையையும் குருத்துவப் பயிற்சியில் வெளிப்படைத்தன்மையையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவையையும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகும், உண்மை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் வழியாக திருஅவை மேலும் வலிமை பெறும் என்ற நம்பிக்கையை ஆயர்கள் வெளிப்படுத்திய அதேவேளை ஆயர் ஒசோரியோ நம்பிக்கையின் மறைசாட்சியர்" என்று ஆயர் சாவ்ரே அவர்கள் குறிப்பிட்டார்.
"ஆயர் ஒசோரியோவின் மறைசாட்சிய வாழ்வு, மொசாம்பிக் மக்களுக்காக நீதி மற்றும் குணமளிப்பை நாடும் திருஅவையின் பணியை வலுப்படுத்தி, துணிவுடன் நற்செய்தியை அறிவிக்க ஊக்கமளிக்கும்" என்றும் ஆயர் சாவ்ரே அவர்கள் எடுத்துக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.