தேடுதல்

மெட்ஜுகோர்ஜேயில் அமைந்துள்ள அன்னையின் சுரூபம் மெட்ஜுகோர்ஜேயில் அமைந்துள்ள அன்னையின் சுரூபம்  (@Our Lady Queen of Peace in Medjugorje)

மெட்ஜுகோர்ஜே திருத்தலத் தாக்குதல்: பழிவாங்காமல் மன்னிக்க நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு!

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள மெட்ஜுகோர்ஜே திருத்தலத்தில் அன்னை மரியாளின் சுரூபம் சேதப்படுத்தப்பட்டதுடன், புனித யாக்கோபு ஆலயத்தின் வெளிப்புற பலிபீடத்திற்கும் தீவைக்கப்பட்ட சம்பவத்தை பங்குத் திருஅவை கடுமையாகக் கண்டித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள மெட்ஜுகோர்ஜே கத்தோலிக்கப் பங்குத் திருஅவை, அங்குள்ள திருத்தலத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு இடங்களை சேதப்படுத்திய நாசவேலைகளைக் கண்டித்துள்ளதுடன், நம்பிக்கையாளர்கள் இதற்கான எதிர்வினையாக கோபத்திற்குப் பதிலாக இறைவேண்டல், நோன்பு மற்றும் மன்னிப்புடன் பதிலளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 28, செவ்வாயன்று அதிகாலையில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலின் போது, அன்னை மரியாள் காட்சியளித்த மலையில் உள்ள அன்னையின் சுரூபம் மீது கருப்பு வண்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டதுடன், அதன் அருகே அவதூறான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. ஏறத்தாழ 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு நபர் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி புனித யாக்கோபு ஆலயத்தின் வெளிப்புற பலிபீடத்தில் வேண்டுமென்றே தீவைத்துள்ளார். தீ விரைவாக அணைக்கப்பட்டதால் அங்குள்ள எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

உடனடியாக சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகளைத் தொடங்கிய பங்குத் திருஅவை, திருத்தலத்தை "கடவுளையும் அமைதியையும் சந்திக்கும் இடமாக" தொடர்ந்து பாதுகாக்க உதவிய தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு காரணமானவர்கள் மனந்திரும்ப இறைவேண்டல் செய்து வரும் பங்குத் திருஅவை, நம்பிக்கையாளர்கள் தீமைக்குத் தீமை என்று முடிவெடுக்காமல், அன்பு, மன்னிப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து விசாரித்து வருகின்றனர். இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும், திருத்தலம் திறந்தே உள்ளது, மேலும் அதன் வழக்கமான செப வழிபாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

2024 ஆம் ஆண்டு செப்டம்பரில், நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத் துறை, மெட்ஜுகோர்ஜே தொடர்பான ஆன்மீக அனுபவத்திற்கு எந்த தடையும் இல்லை (nihil obstat) என்ற அனுமதியை வழங்கியது. அங்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் காட்சிகளின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மை குறித்து எவ்வித முடிவும் வழங்காமல், அதன்  நேர்மறையான ஆன்மீகப் பலன்களை மட்டும் அது அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

29 ஜூலை 2026, 13:42