குறள்வழி இறைமொழி
அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்
தமிழ் மணக்கும் அன்பு நெஞ்சங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
"குறள்வழி இறைமொழி" தொடர் நிகழ்ச்சியில் "இல்வாழ்க்கை" என்ற அதிகாரத்தை நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். இன்று நாம் சிந்திக்கப் போகும் திருக்குறள், திருமண விழாக்களில் வாழ்த்துரை வழங்குபவர்கள் பெரும்பாலும் மேற்கோள் காட்டும் ஒரு சிறப்பான குறளாகும்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." (திருக்குறள் 45)
இந்தக் குறளில் நான்கு முக்கியமான சொற்கள் இடம்பெறுகின்றன: அன்பு, அறம், பண்பு, பயன். அன்பு இருந்தால் பண்பு உருவாகிறது. அறம் இருந்தால் பயன் உருவாகிறது. எனவே, அன்பும் அறனும் நிறைந்த வாழ்க்கையே பண்பும் பயனும் நிறைந்த வாழ்க்கையாக அமைகிறது. அது இல்வாழ்க்கையாக இருந்தாலும், மாணவர் வாழ்க்கையாக இருந்தாலும், துறவற வாழ்க்கையாக இருந்தாலும், எந்த வாழ்க்கையாக இருந்தாலும் அது பண்பும் பயனும் நிறைந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பது அன்பும் அறமும் ஆகும். இல்வாழ்க்கையில் அன்பு என்பது கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருக்கும் உண்மையான அன்பாகும். அந்த அன்பே இல்லற வாழ்வின் பண்பாக விளங்குகிறது. அந்த அன்பு குறையும் போது, வாழ்க்கையின் பண்பும் குறைகிறது. ஒருவர் எவ்வளவு பெரிய பண்பாளராக இருந்தாலும், கணவன்–மனைவியருக்கிடையே அன்பு இல்லையெனில் அந்த இல்லற வாழ்க்கையின் பண்புத் தன்மை முழுமையடையாது.
அதேபோல், பண்பு மட்டும் போதாது; பயனும் இருக்க வேண்டும். இறைவன் திருவிவிலியத்தில் கூறுகிறார்: "நான் அனுப்புகின்ற மழையும் பனியும் பயன் தராமல் என்னிடமே திரும்பி வராது; அதுபோல என் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தையும் பயனளிக்காமல் என்னிடம் திரும்பி வராது." (எசாயா 55:10–11) அவ்வாறே, இல்லற வாழ்க்கையும் பயனுள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும். அதற்காகவே கடவுள் திருமண வாழ்க்கையை ஏற்படுத்தியுள்ளார். அன்பும் அறமும் இணைந்து வாழும் குடும்பங்களே சமுதாயத்திற்கு நற்பயன் அளிக்கின்றன. இதற்கு திருவிவிலியத்தில் பல சிறந்த குடும்பங்கள் சான்றாக உள்ளன. ஆபிரகாம் – சாரா, அன்னை மரியா – புனித யோசேப்பு போன்றோர் அன்பும் அறமும் நிறைந்த இல்லற வாழ்வின் முன்மாதிரிகளாக விளங்குகின்றனர்.
சீராக்கின் ஞானநூல் (25:1) மூன்று இனியவற்றைக் குறிப்பிடுகிறது:
- சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது,
- அண்டை வீட்டாரோடு நல்லுறவு கொள்வது,
- கணவனும் மனைவியும் அன்போடு வாழ்வது.
இந்த மூன்றும் மிகவும் இனியவை என்று அந்த நூல் எடுத்துரைக்கிறது.
எனவே, இல்லற வாழ்க்கை வாழும் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை பண்பும் பயனும் நிறைந்ததாக இருக்கிறதா? அன்பும் அறமும் அதில் நிலைத்திருக்கிறதா? என்று தினமும் தங்களை ஆய்வு செய்து கொள்ள வேண்டும். எங்காவது குறை இருப்பதை உணர்ந்தால், அதைத் திருத்தி, அன்பையும் அறத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய சிந்தனையை மீண்டும் ஒரு முறை திருக்குறளோடு நிறைவு செய்வோம்:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."
அன்பும் அறமும் நிறைந்த இல்லற வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள இறைவன் நமக்கு அருள்புரிவாராக! நன்றி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.