தேடுதல்

குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி 

குறள்வழி இறைமொழி

உண்மையான இன்பம் எங்கே கிடைக்கிறது? அறத்தின் வழியில் வரும் மகிழ்ச்சியே நிலையானது; மற்ற அனைத்தும் நிலையற்ற மாயை.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

அன்புடைய இறைமக்களே!

குறள் வழி இறைமொழி தொடர் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இதில் இணைந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளும் நன்றிகளும்.

அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

இந்தக் குறளின் மையக் கருத்து என்னவென்றால், உண்மையான இன்பம் அறத்தின் வழியாகவே கிடைக்கும் என்பதாகும். அறத்தோடு பொருளை ஈட்டி, அன்போடும் ஒற்றுமையோடும் வாழ்வதே மனித வாழ்க்கையின் நிறைவு. இத்தகைய வாழ்வை அமைத்துத் தருவது அறம். அதனால்தான் வள்ளுவர், “அறத்தான் வருவதே இன்பம்” என்று உறுதியாகக் கூறுகிறார். இன்று உலகம் பலவிதமான இன்பங்களை மனிதனுக்கு முன்வைக்கிறது. அவற்றில் பல தற்காலிகமானவை; உணர்ச்சிகளைத் தூண்டுபவை; வெளிப்படையாக இனிமையாகத் தோன்றுபவை. ஆனால் அவை நிலையான மகிழ்ச்சியைத் தருவதில்லை. பல நேரங்களில், அவற்றின் முடிவு துன்பமாகவே அமைகிறது. அதனால்தான் வள்ளுவர், “மற்றெல்லாம் புறத்த” என்று கூறுகிறார். அதாவது, அறமற்ற வழியில் கிடைக்கும் இன்பம் உண்மையான இன்பமல்ல.

மேலும், “புகழும் இல” என்கிறார். அறத்தின் வழியில் கிடைக்கும் இன்பம் மனிதனுக்கு மகிழ்ச்சியையும் நல்ல பெயரையும் தருகிறது. ஆனால் அறமற்ற இன்பம் புகழை இழக்கச் செய்கிறது. ஒருவரின் செயலால் அவருக்குப் புகழ் கிடைக்கவில்லை என்றால், அந்தச் செயலில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை உணர வேண்டும். இன்றைய சமுதாயத்தில், வெளிப்புற ஆடம்பரங்களிலேயே இன்பத்தைத் தேடும் மனநிலையை நாம் காண்கிறோம். பெரிய பதாகைகள், விளம்பரங்கள், பாராட்டுகள் ஆகியவற்றில் மகிழ்ச்சி தேடுகிறார்கள். ஆனால் உண்மையான மகிழ்ச்சி தியாகம், சேவை, நேர்மை, அன்பு ஆகிய அறச்செயல்களில்தான் இருக்கிறது.

நீதிமொழிகள் கூறுகின்றன:

“உன் கைகளின் உழைப்பின் பலனை நீ அனுபவிப்பாய்.”

எனவே, நமது செயல்களின் அடிப்படையில்தான் நமது வாழ்க்கையின் இன்பமும் துன்பமும் அமைகிறது. நிலையான மகிழ்ச்சியை விரும்பினால், அதன் அடித்தளமாக அறம் இருக்க வேண்டும். இதற்கு இயேசு ஆண்டவரே சிறந்த எடுத்துக்காட்டு. பாலைவனத்தில் நாற்பது நாள் நோன்பிருந்து பசியாயிருந்தபோது, சாத்தான், “இந்தக் கற்களை அப்பமாக மாற்றும்” என்று சோதித்தான். ஆனால் இயேசு அந்தச் சோதனைக்கு இடமளிக்கவில்லை. பசியாயிருந்தாலும், அறநெறியை மீறவில்லை.

நமது பழமொழி ஒன்று, “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்று கூறுகிறது. ஆனால் இறைநெறியில் வாழ்பவர்களுக்கு இது பொருந்தாது. பசி வந்தாலும், துன்பம் வந்தாலும், உயிருக்கு ஆபத்து வந்தாலும், அறத்தை விட்டுவிடக் கூடாது.

அன்பானவர்களே, நமது குடும்பங்களிலும், சமுதாயத்திலும் அறநெறி வளர வேண்டும். அறத்தின் வழியாக வரும் மகிழ்ச்சியைத் தேடுவோம். நமது வாழ்க்கை இறைவனுக்கும் மனிதருக்கும் பயனளிக்கும் வாழ்வாக அமையட்டும்.

மீண்டும் அந்தத் திருக்குறளை நினைவுகூர்வோம்:

அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

இறைவன் நம்மை அறத்தின் பாதையில் நடத்தி, உண்மையான மகிழ்ச்சியை அருள்வாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூலை 2026, 13:54