தேடுதல்

குறள்வழி இறைமொழி குறள்வழி இறைமொழி 

குறள்வழி இறைமொழி

இல்லற வாழ்வு நமக்காக மட்டும் அல்ல; பிறருக்குத் துணையாக வாழ்வதற்கும். திருவள்ளுவர் கூறும் இல்லறத்தின் உயர்ந்த பொறுப்பை அறிந்துகொள்வோம்.

அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்

திருக்குறளின் இல்லறவியல் அதிகாரத்தில் இடம்பெறும் 42ஆம் குறள்

  • "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை."

இந்தக் குறளில், திருவள்ளுவர் மூன்று வகையான மக்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

முதலாவது, துறந்தார். இவர்கள் தங்களது சொந்த நலனைத் துறந்து, சமுதாய நலனுக்காகவும், இறைப்பணிக்காகவும் வாழ்பவர்கள். துறவிகள், பொதுநலத் தொண்டர்கள், தியாகிகள் போன்றோர் இந்த வரிசையில் அடங்குவர்.

இரண்டாவது, துவ்வாதவர். உடல் நிலை, வயது அல்லது பிற காரணங்களால் உழைத்து வாழ முடியாமல், பிறரின் உதவியை நம்பி வாழும் மக்கள்.

மூன்றாவது, இறந்தார். இந்த உலக வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்தவர்கள். அவர்களுக்காக ஜெபிப்பதும், அவர்களின் நினைவாக நற்செயல்களைத் தொடர்வதும் இல்லறத்தாரின் பொறுப்பாகும்.

இந்த மூன்று வகையினருக்கும் "இல்வாழ்வான் துணை" என்று திருவள்ளுவர் கூறுகிறார். அதாவது, இல்லறத்தில் வாழ்பவர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே இந்தக் குறளின் மையக் கருத்து.

இதே உண்மையை இயேசுவும் நமக்குக் கற்பிக்கிறார். குடும்பம் என்பது தன்னலம் கருதி மட்டும் உருவாக்கப்படவில்லை. அன்பையும், கருணையையும், பகிர்வையும் உலகிற்கு வழங்குவதற்காகவே இறைவன் குடும்பத்தை ஏற்படுத்தியுள்ளார். கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்து பெறும் அன்பு, பிறருக்குச் சேவையாக மாற வேண்டும். திருவிவிலியத்தில் ஆபிரகாம் விருந்தோம்பலை ஒரு வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்தார். அதுபோல நாமும் உதவி செய்வதை ஒரு கடமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, சமுதாய நலனுக்காக வாழ்பவர்களையும், வாழ்வாதாரமின்றி துன்பப்படுபவர்களையும், இறந்தோரின் நினைவையும் மதித்து அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவது இல்லறத்தாரின் உயர்ந்த பொறுப்பாகும். இதுவரை அவ்வாறு செயல்படாமல் இருந்திருந்தால், இன்று முதல் அந்தப் பொறுப்பை உணர்ந்து அன்போடும் அர்ப்பணிப்போடும் வாழ உறுதியேற்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூலை 2026, 13:32