குறள்வழி இறைமொழி
அருட்பணி. செ. ரெ. வெனி இளங்குமரன்
அன்பு நெஞ்சங்களே, உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
"குறள்வழி இறைமொழி" நிகழ்ச்சியில் தொடர்ந்து இணைந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியும், அன்பு நிறைந்த வாழ்த்துகளும்.
இன்று திருக்குறளின் "நீத்தார் பெருமை" அதிகாரத்தில் இடம்பெறும் 30-ஆம் குறளை சிந்திப்போம்.
"அந்தணர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."
இந்தக் குறளில் வரும் "அந்தணர்" என்ற சொல், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சுட்டிக்காட்டுவதல்ல. மாறாக, அது ஒரு உயர்ந்த பண்பைக் குறிக்கிறது. "செந்தண்மை" என்றால் குளிர்ந்த மனம், அமைதியான குணம், கருணை, அன்பு ஆகியவற்றால் நிறைந்த மனநிலை. வெறுப்பு, கோபம், வன்முறை போன்றவற்றிற்கு எதிர்மாறான பண்பே செந்தண்மை. எனவே, அறநெறியில் வாழ்ந்து, எல்லா உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் காட்டுபவரே உண்மையான அந்தணர் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அப்படிப்பட்டவர் எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டார். ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு கொண்ட மனிதர் வரை, எல்லா உயிர்களையும் சமமாக மதித்து, அன்புடன் நடத்துவார். ஏனெனில், ஒவ்வொரு உயிரும் இறைவனின் படைப்பு. ஒவ்வொரு உயிரிலும் இறைவனின் சாயல் உள்ளது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். இந்த உண்மையை இயேசுவும் நமக்கு நினைவூட்டுகிறார். "இவர் என் சீடர் என்பதற்காக ஒருவருக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட, அதற்குரிய பலனை அவர் இழக்கமாட்டார்" என்று ஆண்டவர் கூறுகிறார். சிறிய அன்புச் செயலும் இறைவனின் பார்வையில் மிகப் பெரியதாகிறது.
அதேபோல், வள்ளலார், "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறுகிறார். பிற உயிர்களின் துயரத்தைக் கண்டு மனம் உருகுவது உண்மையான கருணையின் வெளிப்பாடாகும். அதனால்தான் திருக்குறளும் "உயிர்களைக் கொல்லாமை" என்ற உயர்ந்த அறநெறியை வலியுறுத்துகிறது. இன்று உலகம் பல இயற்கைச் சீற்றங்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், உயிரின அழிவுகளையும் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணங்களில் ஒன்று, எல்லா உயிர்களையும் சமமாக மதிக்கும் மனப்பான்மை குறைந்து வருவதுதான். எனவே, நாம் ஒவ்வொருவரும் உண்மையான அந்தணராக வாழ உறுதி ஏற்போம். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் அன்போடும், இரக்கத்தோடும், மரியாதையோடும் நடத்துவோம்.
இன்றைய திருக்குறளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்:
"அந்தணர் என்போர் அறவோர்; மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."
இந்தக் குறளின் வழியில் வாழ இறைவன் நமக்கு அருள்புரிவாராக.
நன்றி. வணக்கம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.