தேடுதல்

2026.07.13 kathaigal 1000 5

கதைகள் ஆயிரம்

பிறரின் துயரத்தில் கண்ணீர் சிந்தும் இதயம்தான் உண்மையான மனிதநேயத்தின் அடையாளம். பிறருக்காக வாழ்பவரை, அவர் மறைந்த பின்னரும் உலகம் நன்றியுடன் நினைவுகூரும்.

பிறருக்காக அழு... உனக்காக உலகம் அழும்

அருள்முனைவர் சேவியர் அந்தோனி சே.ச

ஒரு நாள் தக்காளி, வெங்காயம், ஐஸ் கட்டி ஆகிய மூன்று நண்பர்கள் காலையில் உலா சென்றனர். மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டு சென்ற அவர்கள், ஒரு வாக்குறுதி எடுத்துக்கொண்டனர். "நம்மில் யார் இறந்தாலும், மற்ற இருவர் மனம் விட்டு அழ வேண்டும்," என்று முடிவு செய்தனர். சிறிது தூரம் சென்றபோது ஒரு ஆறு வந்தது. தக்காளியும் வெங்காயமும் ஆற்றில் இறங்கி குளிக்கத் தொடங்கின. அதைப் பார்த்த ஐஸ்கட்டி, "நானும் குளிக்கப் போகிறேன்!" என்று அடம்பிடித்தது. பதறிப்போன தக்காளி,"ஐஸ்கட்டி நண்பா! என்ன சொல்கிறாய்? நீ தண்ணீரில் இறங்கினால் கரைந்துவிடுவாய்!" என்று எவ்வளவோ தடுத்தது.ஆனால் ஐஸ் கட்டி கேட்கவில்லை. ஆற்றில் குதித்தது. சில நொடிகளில் கரைந்து, நீரோடு கலந்துவிட்டது. நண்பனை இழந்த துக்கத்தில் தக்காளியும் வெங்காயமும் மனம் விட்டு அழுதன. அழுதபடியே அவர்கள் வழி தொடர்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரி வேகமாக வந்து, தக்காளி மீது ஏறிவிட்டது. சம்பவ இடத்திலேயே தக்காளி நசுங்கி இறந்தது.

இப்போது வெங்காயம் மட்டும் தனியாகிவிட்டது. அது தக்காளியை நினைத்து கதறி அழுதது. ஓலமிட்டு அழுதது. அந்த அழுகை விண்ணை எட்டியது.அப்போது ஆண்டவர் தோன்றி, "ஏன் இவ்வளவு அழுகிறாய்?" என்று கேட்டார். வெங்காயம் கண்ணீருடன் கூறியது: "ஆண்டவரே! ஐஸ் கட்டி இறந்தபோது நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம். தக்காளி இறந்தபோது நான் தனியாக அழுதேன். நாளை நான் இறந்துவிட்டால் எனக்காக யார் அழுவார்கள்?" அதைக் கேட்ட ஆண்டவர் புன்னகையுடன் கூறினார்: "கலங்காதே வெங்காயமே! உயிரோடு இருந்தபோது நீ பிறருக்காகக் கண்ணீர் வடித்தாய். அதற்கான பலன் வீணாகாது. நீ இறந்த பிறகும் உலகம் உனக்காகக் கண்ணீர் வடிக்கும். அதனால்தான் இன்றுவரை வெங்காயத்தை உரிக்கும்போதெல்லாம் மனிதர்கள் அழுகிறார்கள்."

சிந்தனை

பிறருக்காக நீ அழு; உனக்காக உலகம் அழும். கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல;அது கனிந்த இதயத்தின் மொழி. பிறரின் துயரை உணர்ந்து சிந்தும் கண்ணீரே மனிதநேயத்தின் உயர்ந்த அடையாளம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூலை 2026, 15:22