தேடுதல்

அயர்லாந்து பேராயர்கள் அயர்லாந்து பேராயர்கள் 

அயர்லாந்து திருஅவைத் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயலுக்கு கண்டனம்

வடக்கு அயர்லாந்தில் தீமூட்டும் மேடையில் மசூதியை ஒத்த மாதிரி அமைப்பு வைக்கப்பட்ட சம்பவத்திற்கு, அர்மா கத்தோலிக்கப் பேராயர் ஈமான் மார்ட்டின் மற்றும் அர்மா பேராயர் ஜான் மெக்டொவல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

வடக்கு அயர்லாந்தில் தீமூட்டும் மேடை (Bonfire) ஒன்றின் மீது மசூதியை ஒத்த மாதிரி அமைப்பு வைக்கப்பட்ட சம்பவத்திற்கு, அர்மா கத்தோலிக்கப் பேராயர் ஈமான் மார்ட்டின் மற்றும் அயர்லாந்து திருஅவையின் அர்மா பேராயர் ஜான் மெக்டொவல் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது "மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தும் செயல்" என்றும், அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் ஆபத்து உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 'நல்ல சமாரியன்' பற்றிய இயேசுவின் உவமையை நினைவுகூர்ந்த இரு திருஅவைத் தலைவர்களும், பிற மதங்களையும் கலாச்சாரங்களையும் சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல, அவர்களை அண்டை வீட்டாராக மதித்து, அக்கறையுடனும் அன்புடனும் நடத்த கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய சமூகத்தினரைப் புண்படுத்தும் வகையிலான சின்னங்களைப் பயன்படுத்தி அவர்களை இலக்காகக் கொள்வதும், வன்முறையைத் தூண்டும் மிரட்டல்களும் விவிலியத்தின் அன்பு மற்றும் சமாதானச் செய்திக்கு முற்றிலும் முரணானவை என்றும், அவை மதச் சுதந்திரம் என்ற அடிப்படை மனித உரிமையை மீறுவதாகவும் பேராயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிறிஸ்தவ சின்னங்கள் அவமதிக்கப்பட்டால் கிறிஸ்தவர்கள் எவ்வளவு மனவேதனை அடைவார்களோ, அதேபோல் மற்ற மதங்களின் புனித சின்னங்கள் மீதான தாக்குதல்களையும் அவர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிறிஸ்தவர்களும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் அமைதி, மனித மாண்பு மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் பண்பை வளர்த்தெடுக்க முன்வர வேண்டும் என்று இரு திருஅவைத் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு அயர்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் நல்லெண்ணம், ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பான்மை மற்றும் அமைதியான சகவாழ்வையே ஆதரிக்கின்றனர் என்பதை இஸ்லாமிய சமூகத்திற்கு மீண்டும் உறுதிப்படுத்தி, தங்களது கூட்டறிக்கையை நிறைவு செய்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூலை 2026, 13:27