புனித லொயோலா இஞ்ஞாசியார் புனித லொயோலா இஞ்ஞாசியார் 

இன்றைய புனிதர்

போர்வீரராக வாழ்ந்த இஞ்ஞாசியார், ஒரு காயம் வழியாக இறைவனின் அழைப்பைக் கண்டடைந்து புனிதராக உயர்ந்தார். இயேசு சபையை நிறுவி, கல்வி, மறைப்பணி மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள் மூலம் உலகத் திருஅவையில் அழியாத முத்திரையைப் பதித்தார்.

புனித லொயோலா இஞ்ஞாசியார்

திரு. பிலோமி அலெக்ஸ்    

புனித லொயோலா இஞ்ஞாசியார், ஸ்பெயின் நாட்டிலுள்ள லொயோலா என்ற இடத்தில், இறைப்பற்றுமிக்க குடும்பத்தில் கி.பி. 1491 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று பிறந்தார். இளமையில் இராணுவக் கல்வி கற்ற அவர், 1517 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து சிறந்த போர்வீரராகப் பணியாற்றினார். 1521 ஆம் ஆண்டு மே 20 அன்று, பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராக நடைபெற்ற பாம்ப்ளோனா போரில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கிறிஸ்துவின் வாழ்வைப் பற்றிய நூல்களையும் வாசித்தது அவரது வாழ்வில் ஆழமான ஆன்மிக மாற்றத்தை ஏற்படுத்தியது. மனந்திரும்பிய இஞ்ஞாசியாருக்கு, குழந்தை இயேசுவைத் தழுவிய அன்னை மரியாள் காட்சி அளித்து ஆறுதல் வழங்கியதாக மரபு கூறுகிறது. அதன்பின், தமது வாழ்வை முழுமையாக ஆண்டவர் இயேசுவுக்காக அர்ப்பணிக்க அவர் உறுதியெடுத்தார்.

1522 முதல் 1523 வரை மன்றேசா (Manresa) குகையில் தங்கி ஆழ்ந்த செபம், தவம் மற்றும் தியானத்தில் ஈடுபட்டார். அந்த ஆன்மிக அனுபவங்களே பின்னர் புகழ்பெற்ற "ஆன்மிகப் பயிற்சிகள்" (Spiritual Exercises) என்ற நூலாக உருவாயின.பின்னர் பாரிஸ் நகரில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்ற அவர், 1534 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தனது தோழர்களுடன் இணைந்து இயேசு சபையை (Society of Jesus – Jesuits) நிறுவினார். திருஅவையின் நற்செய்திப் பணி, கல்வி, மறைப்பணி மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக இயேசு சபை உலகம் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தொடங்கியது. புனித லொயோலா இஞ்ஞாசியார் 1556 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று இறைவனடி சேர்ந்தார். பின்னர், 1622 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், இயேசு சபையினருக்காகவும், அவர்கள் உலகம் முழுவதும் ஆற்றிவரும் கல்வி, மறைப்பணி மற்றும் சமூகப் பணிகளுக்காகவும் இறைவனிடம் உருக்கமுடன் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

31 ஜூலை 2026, 14:08