இன்றைய புனிதர்
புனித சார்பேல் மக்லூப்
திரு. பிலோமி அலெக்ஸ்
புனித சார்பேல் மக்லூப் அவர்கள், லெபனான் நாட்டின் பெக்கா காஃப்ரா (Bekaa Kafra) என்ற கிராமத்தில், 1828 ஆம் ஆண்டு மே 8 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் ஆண்டன் சரியாய் மக்லூப் மற்றும் பிரிஜிட்டா சிட்ராக் ஆவர். சிறுவயதிலேயே, 1831 ஆம் ஆண்டு, தனது தந்தையை இழந்தார். அதன் பின்னர், அவரது தாயார் அவரை ஆழ்ந்த இறைப்பற்றுடனும் நல்ல ஒழுக்கத்துடனும் வளர்த்தார். சிறுவயதிலிருந்தே இறைவனுக்காக வாழ வேண்டும் என்ற ஆவல் கொண்ட சார்பேல், லெபனான் மரோனைத் துறவறச் சபையில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார். 1859 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று அவர் குருத்துவ அருள்பொழிவு பெற்றார். குருவாகப் பொறுப்பேற்ற பிறகு, ஆண்டவருடனான ஆழ்ந்த ஒன்றிப்பை நாடி, 23 ஆண்டுகள் தனிமையிலும் தியானத்திலும், இடைவிடாத செப வாழ்க்கையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், 1898 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று ஆண்டவரில் அமைதியடைந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், அவரது கல்லறையிலிருந்து அற்புதமான ஒளி வெளிப்பட்டதாக மக்கள் கண்டனர். இதையடுத்து, ஏராளமானோர் அவரது கல்லறைக்கு வந்து செபித்து, பல்வேறு அருள்களையும் அற்புதங்களையும் பெற்றதாகச் சாட்சியமளித்தனர்.
இந்த அற்புதங்களின் காரணமாக, 1950 மற்றும் 1952 ஆகிய ஆண்டுகளில் அவரது கல்லறை திறக்கப்பட்டது. அப்போது, பல ஆண்டுகள் கடந்திருந்த போதிலும், அவரது திருஉடல் அழியாமல் இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் நான்கு முறை அவரது கல்லறை திறந்து பரிசோதிக்கப்பட்டபோதும், திருஉடல் அழியாமல் இருந்ததாகச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. அவரது பரிந்துரையால் நிகழ்ந்த அற்புதங்களை திருஅவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று புனித சார்பேல் மக்லூப் அவர்களை புனிதராக உயர்த்தினார்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்போர் மற்றும் உடல் நலக் குறைவால் துன்புறுவோர் அனைவரும், புனித சார்பேல் மக்லூப் அவர்களின் பரிந்துரையால் இறைவனின் ஆறுதலையும் குணமளிக்கும் அருளையும் பெறுவார்களாக.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.