இன்றைய புனிதர்
புனித புருனோ
திரு. பிலோமி அலெக்ஸ்
புனித புருனோ, கிபி 1045-ஆம் ஆண்டு இத்தாலியின் சோளேரோ (Solero) என்ற ஊரில் இறைப்பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இறைபக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கிய அவர், இறையழைப்பை ஏற்று கிபி 1079-ஆம் ஆண்டு அருள்பொழிவு பெற்று குருவானார். பின்னர் இத்தாலியின் செக்னி (Segni) மறைமாவட்டத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அவர், மக்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, சிறந்த மறைப்பணிகளை ஆற்றினார். நற்கருணை ஆண்டவர்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த அவர், திருச்சபையின் சிறந்த இறையியலாளராகவும், மறையுரை ஆற்றுபவராகவும் புகழ்பெற்றார். மேலும், நான்கு திருத்தந்தையர்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். கிபி 1080-ஆம் ஆண்டு செக்னி (Segni) மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் பெனடிக்டின் மடவாழ்வைத் தழுவி, புகழ்பெற்ற மோன்டே காச்சினோ மடத்தின் தலைவராக (Abbot) பொறுப்பேற்று திருச்சபைக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். திருத்தந்தையின் வேண்டுகோளின்படி மீண்டும் ஆயர் பணியை ஏற்று, இறைமக்களுக்கு சிறந்த மேய்ப்பனாக விளங்கினார். எழுத்துப் பணியிலும் மறையுரையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர், கிபி 1123-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று ஆண்டவரில் நித்திரையடைந்தார். அவரது புனித வாழ்வையும், திருச்சபைக்காக ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க பணியையும் பாராட்டி, திருத்தந்தை மூன்றாம் லூசியஸ் அவர்கள் கிபி 1183-ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று அவரைப் புனிதராக அறிவித்தார்.
புனித புருனோவின் திருவிழாவைக் கொண்டாடும் நாம், திருச்சபையில் தேவ அழைத்தல்கள் பெருகவும், இறைவனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அருள்பணியாளர்கள் அதிகரிக்கவும் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.