தேடுதல்

புனித பெனடிக்ட் புனித பெனடிக்ட்  

இன்றைய புனிதர்

"ஜெபிப்போம்; உழைப்போம்" என்ற வாழ்வியல் கொள்கையால் உலகத் துறவற வாழ்வுக்கு வழிகாட்டியவர் புனித பெனடிக்ட். அவரது விசுவாசமும் ஒழுக்கமும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்வோம்.

புனித பெனடிக்ட்

திரு. பிலோமி அலெக்ஸ்    

புனித பெனடிக்ட், இத்தாலி நாட்டின் உம்பிரியா பகுதியில் உள்ள நர்சியா (Norcia) என்ற நகரில், கி.பி. 480ஆம் ஆண்டு வசதியான கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். உரோமையில் கல்வி பயின்ற அவர், அங்கிருந்த ஒழுக்கக்கேடும் உலக வாழ்க்கையின் சீர்கேடும் அவரை ஆழமாக பாதித்தன. அதனால், கி.பி. 500ஆம் ஆண்டு சுபியாகோ (Subiaco) என்ற மலைப்பகுதிக்குச் சென்று, மூன்று ஆண்டுகள் தனிமையில் இறைத் தியானமும் தவ வாழ்வும் மேற்கொண்டார்.

பின்னர், மொன்டே காசினோ (Monte Cassino) என்ற இடத்தில் துறவுமடத்தை நிறுவிய அவர், துறவிகள் ஒழுங்காக வாழ்வதற்கான விதிமுறைகளை உருவாக்கினார். இவ்விதிமுறைகளே இன்று வரை உலகம் முழுவதும் உள்ள பல துறவறச் சபைகளின் அடிப்படை ஒழுங்குமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அவரது கண்டிப்பான ஒழுங்குமுறைகளை விரும்பாத சிலர், திராட்சை இரசத்தில் விஷம் கலந்து அவரைக் கொல்ல முயன்றனர். ஆனால், புனித பெனடிக்ட் அந்தக் கிண்ணத்தின் மீது சிலுவை அடையாளம் இட்டு ஜெபித்தவுடன், அது உடனே வெடித்து சிதறியது என்று மரபு கூறுகிறது.

ஆழ்ந்த இறைபக்தி கொண்ட புனித பெனடிக்ட், பிறர் மனதை அறியும் வரம், தீர்க்கதரிசனம் உரைக்கும் வரம் மற்றும் சாத்தானின் தாக்குதல்களை உணரும் ஆன்மீக வரங்களைப் பெற்றவராக அறியப்படுகிறார்.

"ஜெபிப்போம்; உழைப்போம்" (Ora et Labora) என்ற உயரிய கொள்கையை வாழ்வில் செயல்படுத்திய அவர், கி.பி. 547ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். பின்னர், 1964ஆம் ஆண்டு திருத்தந்தை புனித ஆறாம் பவுல், புனித பெனடிக்டை ஐரோப்பாவின் பாதுகாவலர் என்று அறிவித்தார்.

புனித பெனடிக்டின் திருவிழாவைக் கொண்டாடும் நாம், அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, ஜெபத்தையும் உழைப்பையும் நம் அன்றாட வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு வாழ முயற்சி செய்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூலை 2026, 13:34