திருத்தூதர் புனித தோமா திருத்தூதர் புனித தோமா 

இன்றைய புனிதர்

திருத்தூதர் புனித தோமா, ஆண்டவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராகவும், இந்தியாவிற்கு நற்செய்தியைக் கொண்டு வந்த முதல் திருத்தூதராகவும் போற்றப்படுகிறார். கி.பி. 52-ஆம் ஆண்டு இந்தியா வந்து பல இடங்களில் திருஅவைகளை நிறுவி, கி.பி. 72-ஆம் ஆண்டு சென்னை புனித தோமையார் மலையில் வீரச்சாவைத் தழுவினார். ஜூலை 3-ஆம் நாள் அவரது திருவிழாவைக் கொண்டாடும் திருஅவை, அவரது உறுதியான விசுவாசத்தையும் நற்செய்தி அறிவிக்கும் அர்ப்பணிப்பையும் பின்பற்ற அழைக்கிறது.

திருத்தூதர் புனித தோமா

திரு. பிலோமி அலெக்ஸ்      

திருத்தூதர் புனித தோமா, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். கலிலேயாவில் ஏழ்மையான மீனவக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆண்டவர் இயேசுவின் அழைப்பைப் பெறுவதற்கு முன்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

எதையும் முழுமையாக அறிந்து கொண்ட பிறகே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருந்ததால், உயிர்த்தெழுந்த இயேசுவை நேரில் காணாமல் அவர் உயிர்த்தார் என்பதை நம்பவில்லை. ஆனால், உயிர்த்த ஆண்டவர் அவருக்குத் தோன்றியபோது, "என் ஆண்டவரே! என் கடவுளே!" (யோவான் 20:28) என்று அறிக்கையிட்டு தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஆண்டவரின் நற்செய்தியை இந்தியாவிற்கு முதன்முதலில் கொண்டு வந்த திருத்தூதர் என்ற பெருமை புனித தோமாவுக்கே உரியது. முதலில் தக்ஷசிலா (Taxila) பகுதியில் நற்செய்தியை அறிவித்து பலருக்கு திருமுழுக்கு வழங்கினார். பின்னர் சோகோத்ரா (Socotra) தீவில் சில காலம் மறைப்பணி ஆற்றினார்.

கி.பி. 52-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் நாள் சேர நாட்டின் மலபார் பகுதிக்கு வந்த அவர், அங்கு பல்லூர், கோட்டக்காவு, கொடுங்கல்லூர், கொல்லம் உள்ளிட்ட பல இடங்களில் நற்செய்தியை அறிவித்தார். அப்பகுதியில் திருஅவைகளை நிறுவி, ஆயர்களையும் குருக்களையும் நியமித்து திருஅவையின் வளர்ச்சிக்குப் பெரும் அடித்தளம் அமைத்தார்.

பின்னர் கி.பி. 65-ஆம் ஆண்டு கொரமண்டல் கடற்கரைப் பகுதியாகிய இன்றைய சென்னை மயிலாப்பூருக்கு வந்து தனது மறைப்பணியைத் தொடர்ந்தார். இறுதியாக, கி.பி. 72-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் நாள், இன்றைய புனித தோமையார் மலை (St. Thomas Mount) பகுதியில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு வீரச்சாவைத் தழுவினார்.

அவரது உடல், அன்றைய மயிலாப்பூர் மன்னரின் அனுமதியுடன், தற்போது சாந்தோம் பேராலயம் அமைந்துள்ள இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3-ஆம் நாள், திருத்தூதர் புனித தோமாவின் திருவிழாவை திருஅவை சிறப்பாகக் கொண்டாடுகிறது.

இத்திருவிழாவில், புனித தோமாவைப் போல உண்மையை ஆராய்ந்து அறிந்து, உறுதியான நம்பிக்கையுடன் கிறிஸ்துவை பின்பற்றுவோம் என்றும், நற்செய்தியை துணிவுடன் அறிவிக்கும் வாழ்வை மேற்கொள்வோம் என்றும் உறுதி ஏற்போம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

03 ஜூலை 2026, 12:58