இன்றைய புனிதர்
திருத்தூதர் புனித யாக்கோபு
திரு. பிலோமி அலெக்ஸ்
திருத்தூதர் புனித யாக்கோபு, கலிலேயாவில் வாழ்ந்த செபெதேயு மற்றும் சலோமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அல்பேயுவின் மகனான யாக்கோபுவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, இவர் "பெரிய யாக்கோபு" என்று அழைக்கப்படுகிறார். தன் சகோதரர் புனித யோவானுடன் சேர்ந்து மீன்பிடித் தொழில் செய்து வந்த யாக்கோபுவை, ஆண்டவர் இயேசு தம் முதல் சீடர்களுள் ஒருவராக அழைத்தார். ஆண்டவருடன் நெருக்கமாக இருந்து, அவருடைய போதனைகளையும் புதுமைகளையும் நேரில் காணும் பேற்றைப் பெற்றார். யாயிருவின் மகளை ஆண்டவர் உயிரோடு எழுப்பிய நிகழ்விலும், உருமாற்ற மலை நிகழ்விலும், கெத்சேமனி தோட்டத்தில் ஆண்டவர் செபித்த வேளையிலும், பேதுரு மற்றும் யோவானுடன் இணைந்து அவர் உடனிருந்தார். ஆண்டவர் எருசலேம் நோக்கிப் பயணம் செய்தபோது, சமாரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அப்போது அவர்கள்மேல் வானத்திலிருந்து நெருப்பு இறங்குமாறு செய்யலாமா என்று யாக்கோபும் யோவானும் கேட்டனர். ஆனால் ஆண்டவர் அவர்களைக் கடிந்துகொண்டு, இரக்கத்தையும் பொறுமையையும் போதித்தார்.
ஆண்டவரின் உயிர்ப்பிற்குப் பிறகு, புனித யாக்கோபு ஸ்பெயின் நாட்டில் நற்செய்தியை அறிவித்ததாக மரபு கூறுகிறது. குறிப்பாக அஸ்தூரியஸ், காஸ்டீலா, அரகோன் உள்ளிட்ட பகுதிகளில் இறைப்பணியாற்றியதாக நம்பப்படுகிறது. மேலும், சரகோசா நகரில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்தை நிறுவியதாகவும் மரபு தெரிவிக்கிறது. கி.பி. 42 அல்லது 44 ஆம் ஆண்டில், மன்னர் ஏரோது அகிரிப்பா முதலாம் அவர்களின் ஆணையின்படி வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால், திருத்தூதர்களில் முதல் மறைசாட்சியாக புனித யாக்கோபு விளங்குகிறார். பின்னர் அவரது சீடர்கள் அவரது திருவுடலை ஸ்பெயின் நாட்டின் சாந்தியாகோ டி கம்போஸ்தேலா நகரில் அடக்கம் செய்ததாக மரபு கூறுகிறது. திருஅவை புனித யாக்கோபுவை புனிதராகப் போற்றி, கால்நடை மருத்துவர்களின் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்டோரின் பாதுகாவலராக மதிக்கிறது.
திருத்தூதர் புனித யாக்கோபுவின் திருவிழாவைக் கொண்டாடும் நாம், அவரது பரிந்துரையால் வாத நோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவர்களுக்காக உருக்கமுடன் இறைவேண்டல் செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.