2026.07.02 gaza 2

பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர்களுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய திருப்பீடம்!

பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு (UNRWA) தனது நிதி ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய திருப்பீடம், அந்நிறுவனம் கோடிக்கணக்கான பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர்களுக்கு இன்றியமையாத உயிர்நாடி எனக் குறிப்பிட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர்களுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கு திருப்பீடம் தனது நிதி ஆதரவை மீண்டும் புதுப்பித்துள்ளதுடன், கோடிக் கணக்கான பாலஸ்தீன புலம்பெயர்ந்தோர்களுக்கு இந்த முகமை ஒரு "இன்றியமையாத உயிர்நாடி" என்றும் தெரிவித்துள்ளது.

ஐ நா அவையின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமைக்கான தன்னார்வப் பங்களிப்புகள் குறித்து ஐநா பொது அவையின் தற்காலிகக் குழுவில் பேசிய போது, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில், குறிப்பாக பொதுமக்கள் தொடர்ந்து வன்முறை, இடம்பெயர்வு மற்றும் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வரும் காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்த தனது ஆழ்ந்த கவலையை திருப்பீடம் வெளிப்படுத்தியுள்ளது.

அப்போது கல்வி, நலவாழ்வு, உணவளித்தல் மற்றும் சமூக ஆதரவை வழங்கி, புலம்பெயர்ந்தோர் மாண்புடன் வாழ உதவும் ஐ நா அவையின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமையின் 70 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை திருப்பீடம் எடுத்துரைத்தது.

இந்த முகமையின் பணியாளர்கள் கொல்லப்படுவதையும், அதன் பள்ளிகள் மற்றும் தங்குமிடங்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் கடுமையாகக் கண்டித்துள்ள திருப்பீடம்,  இத்தகைய செயல்கள் அணைத்துலக மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் என்றும் விவரித்துள்ளது.

மேலும், மனிதாபிமான உதவிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் வழங்கப்பட வேண்டும் எனவும் திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது.

காசா, மேற்கு கரை, ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் மனிதாபிமான தேவைகள் அதிகரித்து வரும் இந்த சூழலிலும் , ஐ நா அவையின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமை 100 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த அறிக்கையை திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

தனது நிதிப் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய திருப்பீடம், ஐ நா அவையின் நிவாரணம் மற்றும் பணிகள் முகமை தனது மனிதாபிமான பணியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, போதுமான, கணிக்கக்கூடிய மற்றும் நிலையான நிதியை வழங்குமாறு அனைத்துலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த முகமையின் எதிர்காலம் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, ஒருதலைப்பட்சமான முடிவுகளால் அல்ல என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

02 ஜூலை 2026, 12:19