காசா மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி தேவை: அருள்பணி கேப்ரியல் ரொமனெல்லி
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
காசாவில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் பங்குத்தந்தை அருள்பணி கேப்ரியல் ரொமனெல்லி அவர்கள், உடனடி உலகளாவிய மனிதாபிமான உதவியை வலியுறுத்தி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி, "பேரழிவு" என்ற சொல்லாலும் விவரிக்க முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எரிபொருள், போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு அன்றாட வாழ்க்கையை ஏறக்குறைய சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளதாக கூறிய அவர், "உதிரிபாகங்கள் இல்லாததால், ஆலயத்தின் பெரும்பாலான வாகனங்கள் தற்போது செயல்படவில்லை" என்றும் "எஞ்சியுள்ள ஒரே ஒரு வாகனமும் தரமற்ற எரிபொருளால் பழுதடையும் ஆபத்தில் உள்ளது" என்றும் கூறியுள்ளார்.
ஒரு லிட்டர் டீசல் தற்போது ஏறத்தாழ 13 அமெரிக்க டாலர் விலையில் விற்கப்படுகிறது. இதனால் பலரும் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியிலிருந்து தயாரிக்கப்படும் தற்காலிக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர், இது வாகனங்களின் இயந்திரங்களை சேதப்படுத்துகிறது.
வாகனங்களுக்குப் பதிலாக கழுதை வண்டியைப் பயன்படுத்துவது குறித்துத் தான் பரிசீலித்ததாகவும், ஆனால் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அதுவும் சாத்தியமில்லாமல் போனதாகவும் அருள்பணி ரொமனெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார். போருக்கு முன்பு ஏறத்தாழ 300 முதல் 600 அமெரிக்க டாலராக இருந்த ஒரு கழுதையின் விலை, தற்போது 16,000 முதல் 17,000 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"பல சாலைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகள், பள்ளிகள், பணியிடங்களைச் சென்றடையவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் போக்குவரத்து மிகவும் முக்கியமானது" என்பதை அவர் வலியுறுத்தினார்.
ரஃபா பகுதிக்குள் அனைத்துலக அமைதிப்படை அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்ற செய்திகளை ஒரு நேர்மறையான முதல் படியாக அவர் வரவேற்றாலும், நீண்டகால மறுசீரமைப்புடன், காசா மக்களுக்கு உணவு, எரிபொருள், மருந்து மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பதையும் அருள்பணி ரொமனெல்லி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.