வன்முறையால் இரத்தம் சிந்தும் மேற்குக் கரை; அமைதிக்காக உலகிற்கு அழைப்பு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
புனித பூமியின் பாதுகாப்பில் செயல்படும் பள்ளிகளின் தலைவர் அருள்பணி இப்ராஹிம் ஃபால்டாஸ் அவர்கள், மேற்குக் கரையில் தீவிரமடைந்து வரும் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். அங்குள்ள தற்போதைய நிலையை விவரித்த அவர், "மேற்குக் கரை எரிகிறது, இரத்தம் சிந்துகிறது, வலியால் கதறுகிறது" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை காரணமாக துன்பம், அழிவு மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும், அதே வேளையில் அமைதி மேலும் எட்டாக்கனியாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமையை காசாவுடன் ஒப்பிட்ட அருள்பணி ஃபால்டாஸ் அவர்கள், மேற்குகரை பெருகிய முறையில் துண்டு துண்டாக மாறியுள்ளது என்றும், சமூகங்கள் பிளவுபட்டு, அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் அடிக்கடி நிகழும் சாலைத் தடுப்புகளால் ஏற்படும் சிரமங்களை சுட்டிக்காட்டிய அவர், இவை அங்குள்ள குடும்பங்கள், மருத்துவமனைகள், பணியிடங்கள் மற்றும் உறவினர்கள் வாழும் இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கின்றன என்று விவரித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள் குறித்தும் கவலை தெரிவித்துள்ள அவர், பல பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த வீடுகளில் கூட தற்பொழுது பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கூறியுள்ளார்.
தொடரும் வன்முறைகள் இளைஞர்களின் நம்பிக்கையையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அழித்து, குடும்பங்களை அச்சத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் தவிக்கவிட்டுள்ளதாக அருள்பணி ஃபால்டாஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள் விடுத்த அவர், வன்முறையை நிறுத்துமாறு திருத்தந்தை அவர்கள் மீண்டும் மீண்டும் விடுக்கும் அழைப்புகளுக்கு உலக நாடுகள் செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் இரு மக்களுக்கும் இடையே சிறந்த நீதி, புதுப்பிக்கப்பட்ட சமநிலை மற்றும் அமைதிக்கான புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்று அருள்பணி ஃபால்டாஸ் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.