கோப்பு படம்: அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆர்லாண்டோவில் திருப்பலி நிறைவேற்றும் நூற்றுக்கணக்கான அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள். கோப்பு படம்: அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆர்லாண்டோவில் திருப்பலி நிறைவேற்றும் நூற்றுக்கணக்கான அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள். 

இரு மரண தண்டனைகளை நிறுத்துமாறு புளோரிடா ஆளுநருக்கு ஆயர்கள் வேண்டுகோள்!

அமெரிக்காவின் புளோரிடா கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, ஜேம்ஸ் டக்கெட் மற்றும் டொமினிக் ஒக்கிகோன் ஜூனியர் ஆகியோரின் மரண தண்டனையை நிறுத்தி, பரோல் இல்லாத ஆயுள் சிறைத் தண்டனையாக மாற்றுமாறு ஆளுநர் ரான் டிசாண்டிஸை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அமெரிக்காவின் புளோரிடா கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, ஜூலை 28, செவ்வாயன்று, மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த ஜேம்ஸ் டக்கெட் மற்றும் டொமினிக் ஒக்கிகோன் ஜூனியர் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி, அவர்களின் தண்டனையை பரோல் இல்லாத ஆயுள் சிறைத் தண்டனையாக மாற்றுமாறு ஆளுநர் ரான் டிசாண்டிஸ்  அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூலை 21, செவ்வாயன்று, அனுப்பப்பட்ட கடிதத்தில், பேரவையின் செயல் இயக்குநர் மைக்கேல் பி. ஷீடி அவர்கள், இருவரும் செய்த குற்றங்கள் மிகவும் கொடூரமானவை என்பதை ஏற்றுக்கொண்டார். டக்கெட், 1987ஆம் ஆண்டு 11 வயதான தெரேசா மெக்காபி என்ற சிறுமியைக் கொலை செய்த குற்றத்திற்கும், ஒக்கிகோன், 1986ஆம் ஆண்டு ரேமண்ட் மற்றும் மார்த்தா ஆர்ட்ஸ்னர் தம்பதியரை கொலை செய்த குற்றத்திற்கும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்திற்கும் ஆயர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

புனித இரண்டாம் ஜான் பால்  எழுதிய Evangelium Vitae திருமடலை மேற்கோள்காட்டிய ஷீடி அவர்கள், மிகக் கொடூரமான குற்றவாளிகளும் தங்களின் மனித மாண்பை இழப்பதில்லை என்று வலியுறுத்தினார். காயீன்–ஆபேல் நிகழ்வை நினைவுகூர்ந்த அவர், கடவுள் காயீனைத் தண்டித்தார்; ஆனால் அவரது உயிரைப் பறிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆயுள் சிறைத் தண்டனை என்பது நீதியை நிலைநிறுத்துவதோடு, மனித உயிரின் புனிதத்தன்மையையும் மதிக்கும் தண்டனையாகும். உயிரைக் கொடுக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரியது என்பதால், மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஆயர்கள் வலியுறுத்தினர். மேலும், ஒரே நாளில் இரு கைதிகளுக்கு மரண தண்டனையை அரசு அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செயல் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீதியும் இரக்கமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்பதை வலியுறுத்திய ஆயர்கள்,  உயிரிழந்தோரின் ஆன்ம இளைப்பாற்றலுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதலுக்காகவும் இறைவேண்டல் செய்தனர்.

இறுதியாக, பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளிலிருந்து திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்?" (எசேக்கியேல் 18:23) என்ற இறைவார்த்தைகளைச் சிந்திக்குமாறு ஆளுநர் ரான் டிசாண்டிஸ் அவர்களைக் கேட்டுக்கொண்ட ஆயர்கள், தீயவர் இறப்பதை அல்ல, அவர் மனந்திரும்பி வாழ்வதையே கடவுள் விரும்புகிறார் என்பதை இந்த இறைவார்த்தை நினைவூட்டுவதாகவும் குறிப்பிட்டார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

25 ஜூலை 2026, 13:09