தேடுதல்

கிறிஸ்தவர்களுக்கு உதவும் மரியாவின் புதல்விகள் கிறிஸ்தவர்களுக்கு உதவும் மரியாவின் புதல்விகள் 

எண்ணிம யுகத்தில் இளம் பெண்கள் தங்களின் இறை அழைத்தலைக் கண்டறிய உதவும் ஃபியட் திட்டம்!

2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஃபியட்’ திட்டம், இளம் பெண்கள் தங்களின் இறை அழைத்தலை செப உணர்வோடும் ஆன்மீக வழிகாட்டுதலோடும் பகுத்தறிய உதவும் எட்டு மாத இணையவழித் திட்டமாகும்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

பெண்களுக்கான ஒரு முக்கிய உலகளாவிய சமய நிறுவனமான 'கிறிஸ்தவர்களுக்கு உதவும் மரியாவின் புதல்விகள்' (FMA) சபையின் உறுப்பினர்கள், இளைஞர்கள் தங்களின் இறை அழைத்தலை உணரச் செய்யும் முயற்சியான 'சாமுவேல் குழுவை' பற்றி அறிந்த பிறகு ஃபியட் திட்டம் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் மறைமாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 'ஃபியட் திட்டம்' என்று உருவெடுத்தது. இளம் பெண்கள் தங்களின் அழைத்தல் பயணத்தைத் தொடர ஏதுவாக, இணைய வழியில் இத்திட்டம் செயல்பட்டது.

அன்னை மரியா கடவுளின் அழைப்பிற்கு கூறிய "ஆம்" என்ற பதிலைக் குறிக்கும் "ஃபியட்" (Fiat) என்ற சொல்லின் ஊக்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த எட்டு மாதத் திட்டம், இணையவழி அமர்வுகள் மூலம் தங்களின் அழைத்தலைக் கண்டறிய பங்கேற்பாளர்களுக்கு உதவுகிறது. இந்த அமர்வுகளில் தெளிந்து தேர்தல், சுய அறிவு, உள் மன காயங்களிலிருந்து குணமாகுதல் மற்றும் துறவற வாழ்க்கை ஆகியவை பற்றிய அமர்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும், ஒவ்வொரு பங்கேற்பாளரும் மாதந்தோறும் ஒரு ஆன்மீக இயக்குநரைச் சந்தித்து, கடவுளின் திட்டத்தைப் பற்றிய தனிப்பட்ட வழிகாட்டுதலையும் ஆழமான சிந்தனையையும் பெறுகின்றனர்.

இந்தத் திட்டம் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலான ஒரு நேரடி தியானத்துடன் நிறைவடைகிறது. இது பங்கேற்பாளர்கள் இணையவழியில் வளர்த்துக் கொண்ட உறவுகளையும் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்த அனுமதிக்கிறது.

இதன் மூலம் பல பங்கேற்பாளர்கள் தங்களின் அழைத்தலைப் பற்றிய தெளிவைப் பெற்றுள்ளனர், மேலும் சிலர் துறவற வாழ்க்கைக்கான பயிற்சியைத் தொடங்கவும் முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தனது ஆறாவது ஆண்டில் இருக்கும் ஃபியட் திட்டம், ஒரு துடிப்பான எண்ணிம ஊழியமாக மாறியுள்ளது. இளம் பெண்கள் இறைவனின் அழைப்பை செப உணர்வோடு ஆராய்வதற்கு ஒரு ஆதரவான சமூகத்தை இது உருவாக்கியுள்ளது. 'அவர் சண்டே விசிட்டர் இன்ஸ்டிடியூட்' (Our Sunday Visitor Institute) மற்றும் 'ஸ்கேன்லான் பவுண்டேஷன்' (Scanlan Foundation) போன்ற தோழமை அமைப்புகளின் ஆதரவோடு, இந்த முயற்சி பெண்கள் புனிதத்திற்கும் சேவைக்குமான கடவுளின் அழைப்பிற்கு தாராள மனதுடன் பதிலளிக்க தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஜூலை 2026, 13:07