ஆசியாவில் பாலங்களை அமைக்கும் திருஅவையாக உருவெடுக்க FABC பேரவை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவுறுதிப் பேரவையில், ஆசியாவின் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு சவால்களுக்கு மத்தியில், ஒன்றிணைந்த (Synodal) மற்றும் மறைப்பணியைப் புதுப்பிக்கும் திருஅவையாக, மக்களுக்கிடையே பாலங்களை அமைக்கும் திருஅவையாக விளங்க வேண்டும் என்று பேரவைப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
குழு விவாதங்களின் முடிவுகளை முன்வைத்த கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர், வெவ்வேறு நாடுகளையும் சூழல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், திருஅவையின் எதிர்காலம் குறித்த ஒரே பார்வையை வெளிப்படுத்தினர். போர், அரசியல் பிளவுகள், தீவிர தேசியவாதம், மத தீவிரவாதம், கட்டாய இடம்பெயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல் பரவல் மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் இளைஞர்களின் நிலை போன்ற சவால்களுக்கு திருஅவை துணிச்சலுடன் பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சவால்களை அச்சமாக அல்லாமல், திருஅவையின் மறைப்பணியைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளாக பிரதிநிதிகள் கருதினர். இடம்பெயர்வு மனிதாபிமானச் சவாலாக மட்டுமல்ல, நற்செய்தி அறிவிப்பதற்கான புதிய வாய்ப்பாகவும், செயற்கை நுண்ணறிவும் சமூக ஊடகங்களும் இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் புதிய களங்களாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.
கத்தோலிக்கப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நலவாழ்வு நிறுவனங்கள் மற்றும் சமூக நலப் பணிகள், குறிப்பாக கத்தோலிக்கர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில், உரையாடல், ஒற்றுமை மற்றும் சேவையின் நம்பகமான சாட்சிகளாக திகழ்கின்றன என்று பேரவை வலியுறுத்தியது.
திருஅவையின் புதுப்பிப்பு, பொதுநிலையினர், பெண்கள், இளைஞர்கள், இடம்பெயர்ந்தோர், பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் செயல்பாட்டுமிக்க பங்கேற்பிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், ஆதிக்க மனப்பான்மையிலான தலைமையை விட, பணிவும் சேவையும் மிக்க தலைமைத்துவம், பேசுவதைவிட இறைமக்களின் குரலைக் கவனமுடன் செவிமடுக்கும் பண்பு, மேலும் எதிர்கால குருக்கள் உரையாடலை வளர்த்தெடுத்து, இறைமக்களுடன் இணைந்து பயணிக்கும் மனப்பாங்கைப் பெறும் வகையிலான உருவாக்கப் பயிற்சிகள் அவசியம் என்றும் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இறுதியாக, ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவை (Synodality) என்பது ஒரு நிர்வாக முறையோ செயல்திட்டமோ அல்ல; அது ஆன்மீக மனமாற்றம் என பேரவை உறுதிப்படுத்தியது. தன்னைப் பாதுகாப்பதில் இருந்து மறைப்பணிக்குச் செல்லவும், பிளவிலிருந்து ஒற்றுமைக்குச் செல்லவும், தனிநபர் தலைமையிலிருந்து திருமுழுக்குப் பெற்ற அனைவரின் பொறுப்புப் பகிர்வுக்குச் செல்லவும் திருஅவை அழைக்கப்படுவதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர். பேரவை, தூய ஆவியாரின் வழிநடத்துதலுக்கு ஆசியத் திருஅவையின் பணியை ஒப்படைத்து, அமைதியான செபத்துடன் நிறைவடைந்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.