2026.07.08 amazon

அமேசான் திருஅவையின் இணைந்த பயணத்திற்கு வரலாற்று தொடக்கம்!

ஈக்வடாரின் அமேசான் பகுதியில் உள்ள ஆறு திருத்தூது மறைவட்டங்களை முதன்முறையாக ஒன்றிணைத்த முதல் திருஅவை மாநாடு அப்பகுதி திருஅவையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

ஈக்வடாரின் அமேசான் பகுதியில் உள்ள ஆறு திருத்தூது மறைவட்டங்களை முதன்முறையாக ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட முதல் திருஅவை மாநாடு அப்பகுதி திருஅவையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

2026 ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை புயோவில் உள்ள இன்டிபுங்கோ அருள்பணிப் பயிற்சி மையத்தில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் மற்றும் பழங்குடியினப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அமேசான் திருஅவைப் பேரவையின் (CEAMA) வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில், "தூய ஆவியில் உரையாடல்" எனப்படும் உலகளாவிய மாமன்ற (Synodal) செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு, செபம், உரையாடல் மற்றும் சமூகமாகத் தேர்ந்துதெளிதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் அமேசான் திருஅவை பேரவைக்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு, அதன் அருள்பணி முன்னுரிமைகளைத் தங்களின் உள்ளூர் அருள்பணி திட்டங்களில் ஒருங்கிணைக்கவும் ஒப்புக்கொண்டனர்.

அமேசானிய அடையாளத்துடன் நற்செய்தி அறிவிப்பை வலுப்படுத்துதல், சமூகப் பங்களிப்பை அதிகரித்தல், கல்வியை ஊக்குவித்தல், பழங்குடியின மக்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் அமேசான் பகுதிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த கூட்டம் வலியுறுத்தியது. மேலும், இந்த முன்னுரிமைகளைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்காக, ஒவ்வொரு திருத்தூது மறைவட்டமும் ஒரு பிரதிநிதியைத் தேசிய அமேசான் திருஅவை பேரவையின்  ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நியமித்துள்ளது.

திருஅவையின் பணிகளுக்குள் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் மற்றும் அதைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இப்பேரவை, அமேசானின் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உலகளாவிய மாமன்ற, கலாச்சாரங்களுக்கிடையேயான நற்செய்தி அறிவிப்புப் பணியை மேற்கொள்ளும் திருஅவையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரவைக் கூட்டமானது,  ‘அன்புக்குரிய அமேசான்’ (Querida Amazonia) என்ற திருத்தூது மடலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அமேசான் பகுதி முழுவதும் திருஅவையின் பணிகளை ஆதரித்து கிறிஸ்துவை அறிவிப்பதற்கான அழைப்புவிடுத்த திருத்தந்தை பதினான்காம் லியோ ஆகிய இரு திருத்தந்தையர்களின் பார்வைகளையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூலை 2026, 13:01