அறநெறி சார்ந்த முதலீடு மற்றும் படைப்பைப் பாதுகாப்பதற்கான அழைப்பு விடுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கத் திருஅவைத் தலைவர்கள்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
கத்தோலிக்க சமூகப் போதனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது நன்மை ஆகியவற்றில் வேரூன்றிய அறநெறி சார்ந்த முதலீட்டு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கத்தோலிக்க நிறுவனங்களை திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நைரோபியில் இடம்பெற்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (AMECEA) 21-வது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்கத்தில் இவ்வாறு கூறிய திருஅவைத் தலைவர்கள் நைரோபி பிரகடனத்தையும் முன்வைத்தனர்.
AMECEA உடன் இணைந்து லௌதாதோ சி' (Laudato Si') இயக்கத்தின் ஆப்பிரிக்கப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தோலிக்கர்களுக்கான அறநெறி சார்ந்த முதலீடு குறித்த திட்டமிடல் கூட்டத்தில் இருந்து இந்தப் பிரகடனம் உருவானது. ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், நிபுணர்கள் மற்றும் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பங்கேற்பாளர்கள், எந்தவொரு திருஅவை முதலீடும் அறநெறி ரீதியாக நடுநிலையானது அல்ல என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், மனித மாண்பு மற்றும் படைப்பின் பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் நிதி சார்ந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு மறைமாவட்டங்கள், துறவு சபைகள், பள்ளிகள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'லௌதாதோ சி' என்னும் திருத்தூது மடலால் ஈர்க்கப்பட்ட இந்தப் பிரகடனம், மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட தன்மையை எடுத்துக்காட்டுகிறது, மேலும் முதலீட்டு நடைமுறைகளில் அதிக விவேகத்துடன் செயல்படவும் அழைப்பு விடுக்கிறது.
பெருநிறுவனங்களின் போலியான சுற்றுச்சூழல் அக்கறையை (corporate greenwashing) மறுபரிசீலனை செய்யவும், பொருத்தமான இடங்களில் புதைபடிவ எரிபொருள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவதைக் கருத்தில் கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சியை ஆதரிக்கவும் இந்தப் பிரகடனம் பரிந்துரைக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் ஆற்றல் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் இடம்பெயர்வு போன்ற சவால்களை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி முறைகளுக்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட சமூகங்கள் மற்றும் மாண்புமிக்க வேலைவாய்ப்புகளை முன்னேற்றும் நீதியான மாற்றத்தின் அவசியத்தைப் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.
சுற்றுச்சூழல் நடவடிக்கைகளின் மையத்தில் இளைஞர்களுக்கு முக்கிய இடமளிக்கும் இப்பிரகடனம், திருஅவையின் முடிவெடுக்கும் தளங்கள், அறநெறி சார்ந்த முதலீட்டுக் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் அவர்களின் செயல்பாட்டு பங்களிப்பை வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறது.
இறுதியாக, அந்தந்த பகுதியின் அறநெறி சார்ந்த முதலீட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், லௌதாதோ சி' செயல்திட்டத்தில் (Laudato Si’ Action Platform) பங்கேற்பதை வலுப்படுத்தவும், நமது பொதுவான இல்லத்தைப் பராமரிப்பது திருஅவையின் பணி மற்றும் நற்செய்தி அறிவிப்பின் இன்றியமையாத பகுதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தவும் AMECEA-வின் ஆயர்களுக்குப் பங்கேற்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.