குருத்துவ உருவாக்கத்தை வலுப்படுத்தும் கொலம்பியா திருஅவை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கொலம்பியா ஆயர் பேரவையின் 121-வது நிறைவுறுதிப் பேரவை, "ஆயர் மாமன்ற மற்றும் மறைப்பணிக் கண்ணோட்டத்தில் குருத்துவத்திற்கான ஆரம்ப உருவாக்கம்" என்ற கருப்பொருளின் கீழ், ஜூலை 6 முதல் 10 வரை போகோட்டாவில் நடைபெற்று வருகிறது. குறைந்து வரும் குருத்துவ அழைத்தல்களுக்கும், திருஅவை எதிர்கொள்ளும் புதிய சவால்களுக்கும் பதிலளிக்கும் வகையில் குருத்துவ உருவாக்கத்தை வலுப்படுத்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தக் கூட்டத்தில், ஏறக்குறைய 90 ஆயர்களுடன், குருத்துவக் கல்லூரிகளின் அதிபர்கள், உருவாக்கப் பொறுப்பாளர்கள், குருத்துவ மாணவர்கள், துறவற ஆண்கள் மற்றும் பெண்கள், பொதுநிலையினர் ஆகியோரும் பங்கேற்று, எதிர்கால குருக்களை எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது என்பது குறித்து கேட்டறிதல், பகுத்தறிதல் மற்றும் ஆயர் மாமன்றப் பாணியிலான ஒத்துழைப்பின் வழியாக கலந்துரையாடி வருகின்றனர்.
குருத்துவ உருவாக்கம் என்பது அருள்பொழிவுக்குப் பின்னர் தொடங்கும் ஒன்று அல்ல; அதற்கு முன்பே ஆரம்பமாகும் வாழ்நாள் முழுவதுமான பயணம் என்றும், அது எதிர்கால குருக்களின் மனிதநேயம், ஆன்மீகம், அறிவாற்றல் மற்றும் மேய்ப்புப் பணித்திறன் ஆகியவற்றை முழுமையாக வளர்க்க வேண்டும் என்றும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இன்றைய சமூக, கலாச்சார, டிஜிட்டல் மற்றும் மேய்ப்புப் பணிசார் சவால்களையும் உருவாக்கப் பணியில் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.
இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக, குருத்துவ உருவாக்கத்திற்கான தேசிய வழிகாட்டி ஆவணமான (Ratio Nationalis - ஐ, உலகளாவிய திருஅவையின் ஆயர் மாமன்றப் பயணத்திற்கு ஏற்ப புதுப்பிக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது.
குருத்துவ அழைத்தல்களை ஊக்குவித்து, எதிர்கால குருக்களை உருவாக்குவது குருத்துவக் கல்லூரிகளின் பொறுப்பு மட்டுமல்ல; ஆயர்கள், குருக்கள், துறவறத்தினர், பொதுநிலையினர் என ஒட்டுமொத்த திருஅவையும் இணைந்து ஏற்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு என்றும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏறக்குறைய 4 கோடியே 80 இலட்சம் கத்தோலிக்கர்கள், 9,700 குருக்கள், அதாவது 5,000 பேருக்கு ஒரு குரு என்ற விகிதத்தில் சேவை வழங்கப்படும் நிலையில், குருத்துவ அழைத்தல்களை ஊக்குவிக்கவும், நற்செய்தி அறிவிப்புப் பணியை மேலும் வலுப்படுத்தவும் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று கொலம்பியா திருஅவை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.